இடைத்தரகரை நாடு கடத்தியதில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?: அமித் ஷா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷலை நாடு கடத்திக் கொண்டுவந்தது குறித்து
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷலை நாடு கடத்திக் கொண்டுவந்தது குறித்து தங்களது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தெரிவிக்க வேண்டும் என்று சவால் விடுப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 7-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அமித் ஷா பேசியதாவது:
ஹெலிகாப்டர் பேர முறைகேடு வழக்கில், இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு இப்போது என்ன வேண்டும்?
இடைத்தரகரை பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகிறதா?
புலந்த்சாஹர் வன்முறைக்கு அரசியல் சாயம் பூசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காவல் துறை ஆய்வாளர் உள்பட 2 பேர் வன்முறையில் இறந்தது குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். அதற்குள் காங்கிரஸ் கட்சி அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டது. அதுகுறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.
முன்பு ஒரு முறை பாகிஸ்தான் சென்றபோது, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதியை ஆரத் தழுவினார் சித்து. எனது கேப்டன் ராகுல் என்றும் அவர் கூறி வருகிறார். ஜாதியத்தை ஊக்குவிப்பதுடன், எதிர்மறை அரசியலை செய்து வருகிறது காங்கிரஸ்.
மாநிலத்தின் முதல்வர் வேட்பாளரை அறிவித்து காங்கிரஸ் கட்சி போட்டியிடாது. அவர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு முகங்கள் தேவை. ஜாதி-மத ரீதியில் அரசியல் செய்து வருகிறது என்று அமித் ஷா தெரிவித்தார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷல், துபையிலிருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தி கொண்டுவரப்பட்டார். 
இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
காங்கிரஸ் பதில்: இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைத்தரகர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார் 
என்று காங்கிரஸ் தெரிவித்தது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இந்த விவகாரத்தில் நடைபெற்ற குற்றச்சதியை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. தடை செய்யப்பட்ட அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தையும், ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தையும் மத்திய அரசு ஊக்குவிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com