ம.பி.யில் மின்னணு இயந்திரங்களின் பாதுகாப்பு : காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை என்றும், அவற்றை


மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை என்றும், அவற்றை கையாள்வது தொடர்பாக நீதிமன்றம் நேரடியாக ஆய்வு நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க கோரியும் காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. 
மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவ.28ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸ் தலைவர் நரேஷ் ஷாராஃப் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த போபால், சத்னா, ஷாஜாப்பூர், சாகர் மற்றும் கந்துவா ஆகிய பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களிலும்(விவிபிஏடி) திருத்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களும், பயன்படுத்தப்படாத இயந்திரங்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த இடங்களை நீதிமன்றமே நேரில் ஆய்வு நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 
மனுவை, விசாரித்த உயர்நீதிமன்றம் அதற்கான விளக்கம் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.சேத் தலைமையிலான நீதிபதி வி.கே.சுக்லா கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தீர்ப்பில் கூறியிருப்பதாவது: 
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி ஆகியவையும், பயன்படுத்தப்படாத இயந்திரங்களும் வெவ்வேறு அறைகளில் தான் வைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தனித்தனியே செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே ஆயுதம் தாங்கிய மத்திய பாதுகாப்புப்படை போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினருடன் 3 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் மூலம், தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் தகவல் அளித்துள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை எனக்கருதி ஷராஃப்பின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com