மேற்கு வங்கம்: பாஜகவினர் தாக்குதலில் கூடுதல் எஸ்.பி. உள்பட 12 போலீஸார் காயம்

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாஜக மற்றும் போலீஸாரிடையே ஏற்பட்ட மோதலில் கற்களால் தாக்கப்பட்டு கூடுதல் எஸ்.பி. உள்பட 12 போலீஸார் காயமடைந்தனர். 

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாஜக மற்றும் போலீஸாரிடையே ஏற்பட்ட மோதலில் கற்களால் தாக்கப்பட்டு கூடுதல் எஸ்.பி. உள்பட 12 போலீஸார் காயமடைந்தனர். 
மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹர் மாவட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் ஒரு பேருந்தில் கிளம்பிச் சென்றனர். இந்தப் பேருந்து துப்குரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள துப்ஜ்ஹோரா பகுதியில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. 
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி போலீஸார் மீது கல் வீசித் தாக்கினர். இத்தாக்குதலில் கூடுதல் எஸ்.பி. தென்தூப் ஷெர்பாவின் இடதுகண் மீது கல் பட்டதால் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
கல்வீச்சில் மொத்தம் 12 போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு, அதிரடிப்படை போலீஸ் படை விரைந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மோதலால் அப்பகுதியில் ஏராளமான கார், பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன. சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. அமிதாப மைதி நேரில் ஆய்வு செய்தார்.
இச்சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாவட்ட நிர்வாகமும் கூச்பெஹரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வதை தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டினார். 
பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்கும் ரத யாத்திரை கூச்பெஹரில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க வியாழக்கிழமை மறுக்கப்பட்டது. இதனால், ரத யாத்திரைக்கு மாற்றாக பொதுக்கூட்டம் நடத்த பாஜக முடிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com