5 மாநில பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

அண்மையில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.11) வாக்கு எண்ணிக்கை
5 மாநில பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

அண்மையில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.11) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
 இத்தேர்தல் முடிவுகள், மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
 செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இதையொட்டி, 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?: பாஜக ஆளும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 75 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் மொத்தம் 2,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து பாஜக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இப்போது 4-ஆவது முறையாக ஆட்சியை அக்கட்சி தக்க வைக்குமா? என்பது செவ்வாய்க்கிழமை தெரியவரும். எனினும், இவ்விரு மாநிலங்களிலும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று வாக்கு கணிப்புகள் தெரிவித்துள்ளன.
 காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: பாஜக ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் மொத்தம் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வாக்கு கணிப்புகள் தெரிவித்துள்ளன.
 மிஸோரம் நிலவரம்: வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் மிஸோரம் மட்டுமே. இங்குள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிஸோரமில் முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வாக்கு கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மீண்டும் டிஆர்எஸ்?: 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், கடந்த 7-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு தேர்தல் களத்தில் 1,821 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் தேர்தல் களத்தில் உள்ளன. இந்த மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக வாக்கு கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 காங்கிரஸ் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு: முகுல் வாஸ்னிக்
 புதுச்சேரி, டிச. 9: வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், புதுவை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.
 மேக்கேதாட்டு அணை விவகாரத்தை கர்நாடக, தமிழக அரசுகள் பேசி தீர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
 சோனியா காந்தியின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, புதுவை பிரதேச காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அந்த மாநிலங்களில் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்தனர். இது காங்கிரஸ் மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதைக் காட்டுகிறது. எனவே, நாங்களும் மிகவும் நம்பிக்கையாக உள்ளோம். வருகிற 11-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் நிச்சயமாக 5 மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம்.
 மேக்கேதாட்டு அணை விவகாரம் தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலானது. இதை மாநில அளவில்தான் பேசி தீர்க்க முடியும் என்றார் அவர்.
 பேட்டியின் போது, புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், பிரதேச காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ஆ.நமச்சிவாயம், அமைச்சர்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணா ராவ், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com