திருமணத்துக்கு முந்தைய நாள் மிக உயரமான கட்டடமாகத் தேடி தற்கொலை செய்த பெண் மருத்துவர்

ஐஏஎஸ் அதிகாரியுடன் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பெண் மருத்துவரான மணப்பெண் குடியிருப்புக் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணத்துக்கு முந்தைய நாள் மிக உயரமான கட்டடமாகத் தேடி தற்கொலை செய்த பெண் மருத்துவர்


பாட்னா: ஐஏஎஸ் அதிகாரியுடன் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பெண் மருத்துவரான மணப்பெண் குடியிருப்புக் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் ஸ்னிக்தா சுதான்ஷு பிகார் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை ஐஜியின் மகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உதயகிரி குடியிருப்புக் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்த ஸ்னிக்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இவருக்கும், பிகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி மகேந்திர குமாருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.

கடந்த சனிக்கிழமை நகரின் முக்கியப் பகுதியில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழவில் ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்கொலைக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை காவல்துறை கைப்பற்றியுள்ளது. அவரது செல்போனை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்வி மையத்தில் எம்பிபிஎஸ் படித்த ஸ்னிக்தா, கொல்கத்தாவில் எம்.டி. முடித்தவர். 

தற்கொலை செய்வதற்காக முன்னேற்பாடுடன் இவர் இருந்துள்ளதும், இவர் ஒரு சிறிய பிளாஸ்டிக் ஸ்டூலை காரில் வைத்துக் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த ஸ்டூலை வைத்துத்தான் கட்டடத்தின் மேல் ஏறி குதித்துள்ளார். 

மேலும், இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே நகரில் உயரமான கட்டடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வந்ததாக கார் ஓட்டுநர் கூறியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட ஸ்னிக்தா, உதயகிரி குடியிருப்புக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று வந்துள்ளார். இதே போல திடீரென சில பெரிய பெரிய கட்டடங்களையும் நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com