டிரம்ஸ் இசைக்குழு அமைத்து சாதிக்கும் தலித் பெண்கள்

பிகாரில் முதன்முறையாக தலித் பெண்கள் டிரம்ஸ் இசைக்குழு அமைத்து பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.
டிரம்ஸ் இசைக்குழு அமைத்து சாதிக்கும் தலித் பெண்கள்

பிகாரில் முதன்முறையாக தலித் பெண்கள் டிரம்ஸ் இசைக்குழு அமைத்து பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.

பிகாரில் மிகவும் பின்தங்கிய முசாஹார் தலித் சமுதாயப் பெண்கள் அனிதா, சோனா, லால்தி, சஹதியா, தோம்னி, பஞ்சம், சைதேரிகா, சவிதா, பிஜந்தி மற்றும் மான்தி ஆகிய 10 பேர் இணைந்து நாரி குன்ஜான் சங்கம் மஹிளா பேண்ட் எனும் டிரம்ஸ் இசைக்குழு அமைத்தனர். சமூக ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதா வர்கீஸ் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார்.

முதலில் டிரம்ஸ் என்பது ஆண்களுக்கான இசை என்று அப்பெண்களின் உறவினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இவர்களை ஒன்றிணைத்து டிரம்ஸ் பயிற்சிக்கு ஆசிரியர் நியமித்து அவர்களுக்கு அதை கற்றுக்கொடுத்தது என நாரி குன்ஜன் என்ஜிஓ அமைப்பின் சுதா வர்கீஸ் (74) அத்தனை உதவிகளையும் செய்துள்ளார். இந்த குழு துவங்கப்பட்ட குறைந்த காலகட்டத்திலேயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த இசைக்குழு ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வசூலிக்கிறது (தங்குவதற்கும், உணவுக்கும் தனிக்கட்டணம் வசூலிக்கின்றனர்). இதனால் ஒரு வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேல் வருமானம் வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். டிரம்ஸ் பேண்ட் அமைத்த பின்னர் தங்கள் மீதான சாதி பாகுபாடுகளும் காட்டப்படுவதில்லை, சமுதாயத்தில் தங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் உயர்ந்துள்ளதாகவும் கூறினர். 

ஆரம்ப காலத்தில் தங்களுடைய கணவர், உறவினர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தங்களின் நிதி ஆதாரம் உயர்ந்துள்ளதால் இப்போது ஆதரவாகவே இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் மாறியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் வாசித்தது குறித்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் பாராட்டியது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவும், பாராட்டாகவும் கருதுகின்றனர்.

இதற்கு முக்கிய உறுதுணையாக இருந்த சுதா கூறுகையில், சவிதா, பஞ்சம் ஆகியோர் தங்களுக்கென சொந்த வீடுகளைக் கட்டியுள்ளனர். இப்பெண்கள் அனைவரும் கடுமையாக உழைக்கின்றனர். இவர்களின் இந்த வளர்ச்சி அடுத்தவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com