நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா..?

5 மாநில தேர்தல் முடிவுகள் அலைகள் அடங்கியதை அடுத்து நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா? என்ற அச்சம்  அனைத்து தரப்பிலும்
நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா..?

5 மாநில தேர்தல் முடிவுகள் அலைகள் அடங்கியதை அடுத்து நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா? என்ற அச்சம்  அனைத்து தரப்பிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக இருந்தது. அக்காலகட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயித்து வந்தது.

இதையடுத்து, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளித்தது. பின்னர் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது. இந்நிலையில், இந்த நடைமுறைக்குப் பதிலாக, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தின.

அதன்படி, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வந்தது. ஆனால், கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்றதால், இக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் பாதிப்பை இருக்கும் என்று கருதி, அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்த நிலையில், பேரவைத் தேர்தல் முடிந்த அடுத்த தினமே, பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்தியது.

இதேபோல், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போதும் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. அந்தத் தேர்தல் முடிந்தவுடனேயே, பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின 

இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.80ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.66.14ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த புதிய விலையின்படி, டீசல் விலை இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் விலையோ கடந்த 56 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்காத காரணத்தினால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாலும் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.86-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.73 என்ற அளவில் உயரத் தொடங்கியது. ஒரு லிட்டர் பெட்ரோல் தில்லியில் ரூ.84-ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.91.34-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இதையடுத்து பொதுமக்களிடமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அதிருப்தி நிலவுகிறது. முழுஅடைப்புப் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்தின. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், மத்திய அரசு அதன் மீது விதிக்கும் கலால் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் மத்திய பாஜக அரசு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கருதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.1.50 காசுகள் குறைப்பதாக அறிவித்ததுடன், எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.1 குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆக மொத்தம், இரண்டின் விலையிலும் ரூ.2.50 வரை குறைக்கப்பட்டது.

இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, அக்டோபர் 17-ஆம் தேதி வரையில் பெட்ரோல், டீசலின் விலை ஏறுமுகமாகவே வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு அடுத்த நாளில் இருந்து அவற்றின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது ஆறுதலான விஷயமாகவே இருந்து வந்தது. 

இந்த ஆறுதலான விஷயம் நாளை முதல் விஸ்வரூபம் எடுக்கும் என அனைத்து தரப்பிலும் விவாத பொருளாக பேசப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு சார்பில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நிய செலாவணி பரிமாற்றம் தொடர்புடைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கான செலவினமும் அதிகரிப்பு, காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான நுகர்வோர் விலை விகிதம் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது என பல காரணங்கள் கூறப்பட்டு வந்ததாலும், குஜராத், கர்நாடக தேர்தல் முடிந்த பின்பு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தினமும் சராசரியாக 30 பைசா உயர்த்தி வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு விலை உயர்வு அமைந்தது மக்களுக்கு நினைவில் இருந்து அகன்று இருக்காது.  

தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என கருதி மத்தியில் ஆளும் பாஜக அரசுக்காக, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளை முதல் மீண்டும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

நாளை முதல் ஏற்படவுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இன்றே காரணங்கள் அமைந்துவிட்டது. அதாவது, 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லாதது மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜிநாமா எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.50 ஆக சரிந்துள்ளதே இது போதாது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம். 

ஒன்றரை மாதங்களாக ஆறுதல் அடைந்து வந்த வாகன ஓட்டிகள், நாளை முதல் உயரவுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசு மீண்டும் பொதுமக்களின் 'போற்று'தலுக்கு உள்ளாகலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com