5,000 கி.மீ. பறந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக திங்கள்கிழமை மீண்டும்
5,000 கி.மீ. பறந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி


5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக திங்கள்கிழமை மீண்டும் சோதனை நடத்தியுள்ளது.
ஒடிஸா மாநிலம், அப்துல்கலாம் தீவில் திங்கள்கிழமை மதியம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள 4ஆவது சோதனை தளத்தில் இருந்து மொபைல் லாஞ்சர் கருவி மூலம் செலுத்தப்பட்டதும், அக்னி-5 ஏவுகணை திட்டமிட்டபடி பறந்து சென்று தனது இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அக்னி-5 ஏவுகணை, 17 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலம் கொண்டது. அணுகுண்டுகள் உள்பட சுமார் 1.5 டன் எடை கொண்ட ஆயுதங்களை 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமந்து சென்று, எதிரி நாட்டின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
இந்த ஏவுகணை கடந்த 2012ஆம் ஆண்டில் முதலில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 2013ஆம் ஆண்டில் 2ஆவது முறையாகவும், 2015, 2016ஆம் ஆண்டுகளில் 3 மற்றும் 4ஆவது முறையாகவும் சோதனை நடத்தப்பட்டது.
5ஆவது முறையாக நிகழாண்டில் கடந்த ஜனவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இதன்பின்னர் 6ஆவது முறையாக கடந்த ஜூன் மாதம் அந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, 7ஆவது முறையாக அக்னி-5 ஏவுகணை தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு தேவையான ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை டிஆர்டிஓ அமைப்பு விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். அதன்படி, அக்னி ரக ஏவுகணைகளை அந்த அமைப்பின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும், அக்னி-2 ஏவுகணை 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும், அக்னி-3 மற்றும் அக்னி-4 ஏவுகணைகள் 2,500 கிலோ மீட்டர் முதல் 3,500 கிலோ மீட்டர் வரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.
இதன் வரிசையில், அக்னி-5 ஏவுகணையை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் உருவாக்கினர். அக்னி-1 முதல் அக்னி-4 வரையிலான ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில், அக்னி-5 ஏவுகணை மிகவும் நவீனமானது மற்றும் சக்திவாய்ந்தது. இந்தியாவில் இருந்து சீனாவின் எந்த பகுதியையும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.
அக்னி ரக ஏவுகணைகளை தவிர்த்து, இந்தியாவிடம் உலகிலேயே மிகவும் அதிவேகமாக பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட பிரமோஸ் ரக ஏவுகணையும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com