இந்த வெற்றி வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்: ராகுல்

பாஜக-வின் சித்தாந்தங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வெற்றிபெறும். அந்த வகையில் தற்போது பாஜக-வை வீழ்த்தியுள்ளோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.
இந்த வெற்றி வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்: ராகுல்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல், தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை செவ்வாய்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த வெற்றியானது சிறு, குறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களைச் சேரும். இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். அதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும். இந்த மாநிலங்களுக்கென சிறந்த எதிர்காலத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும். மக்கள் பெருமைப்படும் அளவுக்கு சிறந்த அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்.

பாஜக-வை தவிர்த்து சமாஜவாதி, பகுஜன் சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சித்தாந்தங்கள் ஒன்றுதான். எனவே இம்மாநிலங்களின் முதல்வர் குறித்து எந்தப் பிரச்னையும் இல்லை. அவை சுமூகமாக நடைமுறைப்படுத்தப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தவரையில் சில கோளாறுகள் இருக்கின்றன. மக்களுக்கு அதன் மீது நம்பிக்கை இல்லையென்றால் அது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய பிரச்னையாகும். ஏனென்றால் இதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. அதாவது, இந்த இயந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் மென்பொருளை மாற்றியமைத்தால் அது ஒட்டுமொத்த ஓட்டுப்பதிவையும் பாதிக்கும். ஆனால் அதுவே வாக்குச்சீட்டு முறையில் ஏற்படாது.

இந்த பிரச்னை தொடர்பான கேள்விகள் அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் ஏற்பட்ட போது, அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர். 

நாட்டின் பிரதமர் 3 முக்கிய தேவைகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார். அவை வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு மற்றும் விவசாய நலன் ஆகும். ஊழலுக்கு எதிராக பிரதமர் செயல்படுவார் என நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால், தற்போது பிரதமரே ஊழல் செய்கிறார் என்று மக்கள் நினைக்கின்றனர். 

பாஜக-வின் சித்தாந்தங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வெற்றிபெறும். அந்த வகையில் தற்போது பாஜக-வை வீழ்த்தியுள்ளோம், இது வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com