கேரள தலைமைச் செயலகம் முற்றுகை: பாஜக - காவல்துறை மோதல்

சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள தலைமைச் செயலகத்தை பாஜகவினர் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர்


சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள தலைமைச் செயலகத்தை பாஜகவினர் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து வன்முறை வெடித்தது. 
காவல்துறை மீது கற்கள் மற்றும் நாற்காலி உள்ளிட்டவற்றை வீசியெறிந்து பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். அவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறை விரட்டியடித்தது.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பிலும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலையில் பக்தர்கள், அரசியல் கட்சியினர், சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களை நடத்தினர். இத்தகைய சூழலில், சபரிமலையில் நடை திறக்கப்பட்டதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையாணை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், சபரிமலை போராட்டம் தொடர்பாக பாஜகவினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள தலைமைச் செயலகம் அருகே பாஜக பொதுச் செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 8 நாள்களை கடந்துள்ளது. 
வன்முறை: கேரள அரசு தலையிட்டு இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரியும், சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக் கோரியும் தலைமைச் செயலகத்தை பாஜகவினர் திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனர். 
அப்போது காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது. இதனால், காவல்துறையை நோக்கி கற்களையும், நாற்காலிகளையும் பாஜகவினர் வீசியெறிந்தனர். இதையடுத்து தண்ணீரை பீய்ச்சியடித்தும், புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை காவல்துறை விரட்டியடித்தது.
மத்திய அமைச்சர் வருகை: உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள பாஜக நிர்வாகி ராதாகிருஷ்ணனை மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் நேரில் சந்தித்தார். 
பின்னர் அவர் செய்தியளார்களிடம் பேசுகையில், சபரிமலையில் 144 தடையாணை எதற்கு விதிக்கப்பட்டுள்ளது? பக்தர்கள் ஐயப்ப நாமத்தை பாடுவது கிரிமினல் நடவடிக்கையா என்ன? இதுபோன்ற கட்டுப்பாடுகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை காவல்துறையை கொண்டு நசுக்குவதற்கு அரசு முயற்சிப்பது ஜனநாயக விரோதமானது என்றார்.
காங்கிரஸ் போராட்டம்: சபரிமலை விவகாரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் கூட்டணி சார்பிலும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
சட்டப்பேரவையில் நீடிக்கும் அமளி
சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை திரும்ப பெறக் கோரி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் கேரள சட்டப்பேரவையில் 6-ஆம் நாளாக திங்கள்கிழமையும் அமளி நிலவியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பதாகைகளை ஏந்தியபடி அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர்.
இதனால், கேள்வி நேரம், ஜீரோ ஹவர் போன்ற அவை நடவடிக்கைகளை, பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் ரத்து செய்தார். பின்னர் அவை நடவடிக்கைகளை அவர் தொடங்கியபோது, பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் பேசத் தொடங்கினார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அப்போதும் பேரவைத்தலைவருக்கு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத்தலைவர் அவை நடவடிக்கைகளை பார்வையிட முடியாதபடி சில உறுப்பினர்கள் பதாகைகளை தூக்கி நிறுத்தினர்.
அமளி தொடர்ந்து நீடித்ததால் 32 நிமிடத்துக்குள்ளாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com