ஜம்மு-காஷ்மீர் பேரவை கலைப்பு: ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையைக் கலைத்தது தொடர்பான ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பேரவை கலைப்பு: ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்


ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையைக் கலைத்தது தொடர்பான ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பேரவையைக் கலைத்து கடந்த மாதம் 21-ஆம் தேதி, மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவை கலைக்கப்படுவதற்கு முன் பேரவையின் உறுப்பினராக இருந்த பாஜக நிர்வாகி ககன் பகத் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான ஆளுநரின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) - பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவைத் திரும்பப் பெற்றது. இதனால், பிடிபி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 
அந்த மாநில சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்திருந்தார்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 2 எம்எல்ஏக்களைக் கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சி தலைமையில் புதிய ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. அக்கட்சிகளுக்கு பிடிபி கட்சியிலிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்குப் போட்டியாக, பிடிபி, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அவர்கள் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். எனினும், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையைக் கலைப்பதாக மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் திடீரென அறிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட ஆளுநர் ஆட்சி, வரும் 18-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதன்பின்னர், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com