மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு: நிதியமைச்சர், சிபிஐ வரவேற்பு

வங்கிக் கடன் மோசடியாளராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு
மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு: நிதியமைச்சர், சிபிஐ வரவேற்பு


வங்கிக் கடன் மோசடியாளராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு அனுமதியளித்து பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. பிரிட்டன் சட்ட விதிகளின்படி, மல்லையாவை நாடு கடத்துமாறு பிரிட்டன் உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாடு கடத்துவதற்கான உத்தரவை 28 நாள்களுக்குள்ளாக உள்துறை செயலாளர் பிறப்பித்தாக வேண்டும்.
எனினும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் 14 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு மல்லையா தரப்புக்கு உள்ளது.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் மோசடி செய்ததாக மல்லையா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் அளிப்பதாக பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. 
முன்னதாக, இந்த வழக்கு விசாரணை நிலையில் இருந்தபோது, இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மல்லையா கூறியிருந்தார். மல்லையாவுக்காக மும்பையில் தயார் செய்யப்பட்டுள்ள சிறை அறையில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், அவருக்கான மனித உரிமைகள் மறுக்கப்படும் என்றும், எனவே அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் மல்லையா தரப்பினர் வாதிட்டனர்.
இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்நாத் திங்கள்கிழமை தீர்ப்பை வாசித்தார். அப்போது, மல்லையாவுக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் கூறுவதற்கு எந்தவித அறிகுறியும் இல்லை. அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. இந்த வழக்கில் மல்லையா பதில் அளித்தாக வேண்டும். 
மல்லையா அடைக்கப்படவுள்ள சிறை அறையின் விடியோவை பார்த்ததில், அது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. நீரிழிவு, இதய பாதிப்பு போன்ற மல்லையாவின் உடல்நலப் பிரச்னைகளுக்காக பிரத்யேக மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறையில் அவருக்கு எதேனும் ஒரு விதத்தில் ஆபத்து நேரிடும் எனக் கூறப்படுவதை நம்புவதற்கு எந்தவித காரணமும் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
வரவேற்பு: மல்லையாவை நாடு கடத்துமாறு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்தியாவுக்கு சிறப்புமிக்க நாளாகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்கு இன்று சிறப்புமிக்க நாளாகும். நாட்டை ஏமாற்றும் யாரும் தப்பிக்க முடியாது. பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பலனடைந்த ஒரு மோசடியாளரை பாஜக அரசு மீட்டுக் கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதபோன்று சிபிஐ அமைப்பும் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. 
மல்லையாவை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வந்து, அவருக்கு எதிரான வழக்கில் தீர்வு காண்போம் என்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் அபிஷேக் தயால் தெரிவித்தார்.
மல்லையா விளக்கம்: பிரிட்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு மல்லையா செய்தியாளர்களிடம் பேசியபோது, தனது கடனை அடைக்கத் தயார் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பொய்யன வாக்குறுதி அல்ல என்றும், இதற்கும் தன்னை நாடு கடத்தும் விவகாரத்திற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார். 
பணத்தை திருடிவிட்டதாக தன் மீது சித்தரிக்கப்பட்டுள்ள களங்கத்தை போக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com