ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் திடீர் ராஜிநாமா

இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் திடீர் ராஜிநாமா


இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த சூழலில் உர்ஜித் படேல் பதவி விலகியிருக்கிறார்.
நாட்டின் நிதி நிலையை ஸ்திரத்தன்மையுடன் வைத்திருக்கும் முக்கிய அமைப்பான, ரிசர்வ் வங்கியின் கவர்னராக, உர்ஜித் படேல் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், 8 மாதங்களுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதற்கு முன்பு, ஆர்பிஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. அவர் இரண்டாவது முறையாக பதவியில் நீடிக்க மறுத்து விட்டதை அடுத்து, அந்தப் பதவிக்கு துணை கவர்னராக இருந்த உர்ஜித் படேலை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில், உர்ஜித் படேல் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தனிப்பட்ட காரணங்களுக்காக, எனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளேன். ரிசர்வ் வங்கியில் இத்தனை ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளை ஏற்று நான் பணியாற்றியது, எனக்கு கிடைத்த கெளரவமாகக் கருதுகிறேன். கடந்த சில ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள், அதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோரின் கடின உழைப்பும், ஒத்துழைப்பும், ரிசர்வ் வங்கி குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகளை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்தது.
இந்த நேரத்தில், என்னுடன் பணிபுரிந்த சக பணியாளர்கள், ரிசர்வ் வங்கி வாரிய இயக்குநர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று அந்த அறிக்கையில் உர்ஜித் படேல் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்த அறிக்கையில் மத்திய அரசு குறித்தோ அல்லது மத்திய நிதியமைச்சகம் குறித்தோ அவர் எதையும் குறிப்பிடவில்லை.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, வங்கிகளை ரிசர்வ் வங்கி முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காததே வாராக் கடன் பிரச்னைக்கு காரணம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், ரிசர்வ் வங்கிக்கு போதிய அதிகாரம் இல்லை என்று உர்ஜித் படேல் பதிலளித்தார். இதுதவிர, தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்; நலிவடைந்த வங்கிகளை ஊக்குவிக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால், மத்திய அரசின் ஆலோசனைகளுக்கு ரிசர்வ் வங்கி செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசு கேட்டதாகவும், அதற்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரி நிதியைக் கேட்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இதில், உச்சக்கட்டமாக, ரிசர்வ் வங்கி சட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்படாத பிரிவை பயன்படுத்தி, உர்ஜித் படேலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்பட பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரிசர்வ் வங்கியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயலுகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், உர்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர், இதற்கு முன்பு பன்னாட்டு நிதியம், போஸ்டன் கன்சல்டிங் குழுமம், ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com