மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு: தெலங்கானா காங்கிரஸ் சந்தேகம்

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெற்றிருக்கலாம் என்று அந்த மாநில காங்கிரஸ்


தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெற்றிருக்கலாம் என்று அந்த மாநில காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாதில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில தலைவர் உத்தம் குமார் ரெட்டி சந்தித்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார். மேலும், அனைத்து தொகுதிகளிலும் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உத்தம் குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேக்கிறோம். எனவே எங்களின் சந்தேகத்தை போக்குவதற்கு வாக்கு ஒப்புகைச்சீட்டு அனைத்தையும் எண்ண வேண்டும் என கோரினோம். ஆனால் இதற்கு தேர்தல் ஆணையம் சரியான பதிலை அளிக்கவில்லை.
வாக்கு ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்பட வில்லையெனில், இது தெலங்கானா வரலாற்றில் கருப்பு தினமாக அமையும். அப்போது சந்திரசேகர் ராவுடன் சேர்ந்து தெலங்கானாவில் ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் படுகொலை செய்துவிட்டதாக எங்கள் கட்சி குற்றம்சாட்டும்.
தேர்தல் என்பது வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அப்படியிருக்கையில், வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை ஏன் தேர்தல் ஆணையம் எண்ண மறுக்கிறது? அந்த சீட்டுகள் எண்ணப்படவில்லையெனில், அதுதொடர்பான இயந்திரம் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டதற்கு என்ன அர்த்தம்?
எங்கள் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும், அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக்கோரி மனுக்களை அளிப்பார்கள் என்றார் உத்தம்குமார் ரெட்டி.
சுயபரிசோதனை செய்வது அவசியம்-தெலுங்கு தேசம்: இந்நிலையில், தெலங்கானா தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் சுயபரிசோதனை செய்வது அவசியம் என்று தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரவுலா சந்திரசேகர் ரெட்டி கூறுகையில், அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆதலால் என்ன தவறு நடந்தது? என்பது குறித்து ஆய்வு மற்றும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அதேநேரத்தில் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை எங்கள் கட்சி மதிக்கிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com