ரிசர்வ் வங்கி விவகாரம்: அருண் ஜேட்லிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை திரும்ப பெற முடியாது

ரிசர்வ் வங்கி விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக தொடுக்கப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து முன்பு பிறப்பித்த உத்தரவை
ரிசர்வ் வங்கி விவகாரம்: அருண் ஜேட்லிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை திரும்ப பெற முடியாது


ரிசர்வ் வங்கி விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக தொடுக்கப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து முன்பு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக பொதுநல மனு தொடுத்திருந்தார். அந்த மனுவில் அவர், ரிசர்வ் வங்கியில் இருக்கும் மூலதனத்தை கொள்ளையடிக்கும் செயலில் அருண் ஜேட்லி ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் வழக்குரைஞர் சம்பந்தப்படுத்தியிருப்பதாக தெரிவித்து நீதிபதிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர்.
மேலும் அந்த மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை கண்டுகொள்ளாத வழக்குரைஞர் தொடர்ந்து வாதிட்டு கொண்டிருந்தார். இதனால் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை செலுத்தாதவரை அவரது எந்த மனுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதனிடையே, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்தில் அதே வழக்குரைஞர் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்தார். அதில் அவர், உர்ஜித் படேலின் ராஜிநாமாவை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். எனது பொதுநல மனு மீதான முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே. கௌல், கே.எம். ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் அபராத தொகையான ரூ.50 ஆயிரத்தை மனுதாரர் செலுத்தினால் மட்டுமே அவரின் எந்த மனுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்; முந்தைய பொதுநல மனு தொடர்பான உத்தரவை திரும்ப பெற முடியாது. ரூ.50 ஆயிரம் அபராத தொகையை செலுத்தும் வரையில், மனு எதையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிடுகிறோம் என்றனர். புதிய மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com