ஆம் ஆத்மி அழைப்பை ஏற்ற அத்வானி: பாஜக தலைவர்கள் அதிருப்தி

தில்லி சட்டப்பேரவையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி விடுத்துள்ள அழைப்பை பாஜக மூத்த தலைவர் அத்வானி ஏற்றதாக கூறப்படுவது குறித்து தில்லி பாஜக


தில்லி சட்டப்பேரவையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி விடுத்துள்ள அழைப்பை பாஜக மூத்த தலைவர் அத்வானி ஏற்றதாக கூறப்படுவது குறித்து தில்லி பாஜக தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவையின் 25-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி விடுத்த அழைப்பை அத்வானி ஏற்றுக் கொண்டதாக பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார். அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிகம் இருக்கும் தில்லி சட்டப்பேரவை நிகழ்ச்சியில் அத்வானி பங்கேற்கக் கூடாது என்று தில்லி பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் தங்களது அரசியல் கொள்கைகளை பரப்ப எந்தவித சூழலையும் பயன்படுத்துவர் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்று. 
அந்த வகையில் அத்வானி தாம் அறியாத வகையிலேயே இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியின் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றார்.
எனினும், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், உண்மையில், அத்வானியை இந்த நிகழ்ச்சிக்கு நல்லெண்ணத்துடன் கேஜரிவால் அழைக்கவில்லை என்றார்.
தில்லி சட்டப்பேரவை அமைவதற்கு முன்பாக செயல்பட்டுவந்த தில்லி பெருநகர கவுன்சில்-இன் முதல் தலைவராக அத்வானி கடந்த 1966 முதல் 1970 வரை செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com