டி.ஆர்.எஸ். எம்எல்ஏக்கள் கூட்டம்: தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் ஒருமனதாகத் தேர்வு

தெலங்கானா முதல்வர் பதவிக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவை அக்கட்சியின் எம்எல்ஏக்கள் புதன்கிழமை ஒருமனதாக
டி.ஆர்.எஸ். எம்எல்ஏக்கள் கூட்டம்: தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் ஒருமனதாகத் தேர்வு


தெலங்கானா முதல்வர் பதவிக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவை அக்கட்சியின் எம்எல்ஏக்கள் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்தனர். அவர் தொடர்ந்து 2ஆவது முறையாக தெலங்கானா முதல்வராக வியாழக்கிழமை (டிச.13) பதவியேற்க வாய்ப்புள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, ஹைதராபாதில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் பதவிக்கு சந்திரசேகர் ராவை அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
இதையடுத்து சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவு தொடர்பான அறிவிக்கை வெளியிட வேண்டியுள்ளது. அது வெளியிடப்பட்டால், எனது அரசு பதவியேற்கும்.
வியாழக்கிழமை பதவியேற்க வாய்ப்புள்ளது. இதற்கு சாத்தியம் உள்ளது எனவும் சொல்லலாம். சாத்தியம் இல்லை எனவும் சொல்லலாம். நானும், இன்னும் 2 பேரும் பதவியேற்போம். இதையடுத்து 5-6 நாள்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றார் சந்திரசேகர் ராவ்.
சந்திரசேகர் ராவின் மகன் கே.டி. ராமா ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டாட்சி குறித்து வெறும் வாயளவுக்கு மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார். மாநிலங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தில்லி அரசியலில் டி.ஆர்.எஸ். கட்சி முக்கிய பங்காற்றும். 
குஜராத் முதல்வராக 3 முறை மோடி பதவி வகித்துள்ளார். எனவே மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கும் விவகாரத்தில், முன்னாள் முதல்வர் என்ற முறையில் கூடுதல் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். ஏனெனில், சக்திவாய்ந்த மாநிலங்கள் இருந்தால்தான், நாடு சக்திவாய்ந்ததாக முடியும். இதுவே உண்மையான கூட்டாட்சி ஆகும். 
கூட்டாட்சி குறித்து பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. 2019ஆம் ஆண்டு ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
வாழ்க்கை வரலாறு: தெலுங்கு தேசம் கட்சியை என்.டி. ராமா ராவ் கடந்த 1983ஆம் ஆண்டு தொடங்கியபோது, அக்கட்சியில் சந்திரசேகர் ராவ் சேர்ந்தார். முதன்முதலில் அவர் சந்தித்த தேர்தலில் தோல்வியையே சந்தித்தார். பின்னர் 1985ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து நடைபெற்ற பேரவை, மக்களவைத் தேர்தல்கள் அனைத்திலும் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றார். என்.டி. ராமாராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோரது அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திர பேரவை துணை தலைவராகவும் இருந்துள்ளார். 
தெலங்கானா கோரிக்கை வலுப்பெற்றபோது, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 2001ஆம் ஆண்டு விலகினார். பின்னர் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை ஆரம்பித்தார். 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 
இதில் டி.ஆர்.எஸ். கட்சி 5 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. சந்திரசேகர் ராவ் மத்திய அமைச்சராக பதவியேற்றார். பின்னர் 2009ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்தார். தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்கக்கோரி, 11 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டார். இதையடுத்து மிகப்பெரிய வன்முறை மூண்டதால், அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு தெலங்கானாவை உருவாக்க ஒப்புக் கொண்டது.
இதன்பின்னர் ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பகுதிகளை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெறவே, அந்த மாநிலத்தின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவியேற்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com