பாஜக இல்லாத இந்தியாவே மக்களின் விருப்பம்: சிவசேனை

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாஜக இல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர் என்பதை தெரியப்படுத்தியுள்ளது


மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாஜக இல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர் என்பதை தெரியப்படுத்தியுள்ளது என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் பாஜக கூட்டணியில் சிவசேனை கட்சி அங்கம் வகிக்கிறது. இருப்பினும், பாஜகவையும் மத்திய அரசையும் சிவசேனை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை மையமாக கொண்டு, சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குகள் மூலம், வானத்தில் பறந்து கொண்டிருந்த நபர்களை மீண்டும் பூமிக்கு மக்கள் வர செய்துள்ளனர். 4 முதல் 5 தொழிலதிபர்களின் விருப்பத்தின்படி நாடு ஆளப்படுகிறது. இது ரிசர்வ் வங்கி போன்ற முக்கிய அமைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
5 மாநில தேர்தல் முடிவானது, பாஜக அல்லாத எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது, ஆதலால் மக்கள் தொடர்ந்து வாழ்க்கை நடத்துவதற்கு பாஜகவை சார்ந்திருக்க வேண்டும் என்ற கட்டுக் கதையை உடைத்தெறிந்து விட்டது. பாஜக முதலில் கூட்டணி கட்சிகளை இழந்தது. இப்போது முக்கிய மாநிலங்களை (மாநிலங்களில் ஆட்சியை) இழந்து விட்டது. மிகப்பெரிய பேச்சின் மூலம் தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை இத்தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.
காங்கிரஸ் இல்லாத ராஜீயத்தை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் கனவை பாஜகவின் கோட்டையிலேயே இந்தத் தேர்தல் ஒன்றுமில்லாததாக்கி விட்டது. 5 மாநிலங்களில் இருக்கும் மக்கள், பாஜக இல்லாத இந்தியா வேண்டும் என்பதை சூசகமாக தேர்தல் மூலம் தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது, மிகப்பெரிய கேலிக்கூத்து. இது நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. இதனால் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர், பணவீக்கம் அதிகரித்தது. அந்நேரத்தில் நமது பிரதமரோ, சர்வதேச அரசியலில் ஈடுபட்டிருந்தார். வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்தார். பிறகு, 4 மாநில தேர்தல்களுக்கு விமானத்தில் வந்தார். அவரது சிறுபிள்ளைதனமான பேச்சு, நம்பிக்கைகளாக நிறைந்திருந்தன. அதுவே அவருக்கு எதிராக திரும்பிவிட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முதலில் ஆதரித்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், அரசின் செயல்பாடுகளால் சோர்வுற்று, பதவியை ராஜிநாமா செய்து விட்டார் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com