பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க இருக்கின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க இருக்கின்றனர்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும்போது வாரம் ஒருமுறை பாஜக எம்.பி.க்களை மோடி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். எனினும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்துள்ள நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்தான் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. அந்த மாநிலங்களில் உள்ள 65 மக்களவைத் தொகுதிகளில் 62-ஐ அப்போது பாஜக கைப்பற்றி இருந்தது. ஆனால், இப்போது அங்கு ஏற்பட்டுள்ள தோல்வி, பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அந்த மாநிலங்களில் இழந்த செல்வாக்கை மீட்க இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. இது தவிர 3 மாநிலங்களில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்தும் அந்த மாநில எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
எம்.பி.க்கள் கூட்டத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தேசியச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 
இந்தக் கூட்டத்திலும் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதில், கட்சியின் செயல்பாடுகளை எவ்வாறு மாற்றி அமைக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர்களிடம் அமித் ஷா யோசனைகளைப் பெறுவார் என்றும் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com