ம.பி.யில் பகுஜன், சமாஜவாதி ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.
மாநில காங்கிரஸ் தலைமையகத்தில்  கட்சியினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங் உள்ளிட்டோர்.
மாநில காங்கிரஸ் தலைமையகத்தில்  கட்சியினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங் உள்ளிட்டோர்.


மத்தியப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.
இதையடுத்து, அந்த மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் செளஹான் புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், முடிவுகள் நள்ளிரவு வரை நீடித்தது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பாஜக 109 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 
பகுஜன் சமாஜ் 2, சமாஜவாதி ஒரு தொகுதியைக் கைப்பற்ற, சுயேச்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் வெற்றி கண்டனர். மத்தியப் பிரதேசத்தில், ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை. காங்கிரஸ் 114 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் (116) கிடைக்கவில்லை. பாஜகவும் 109 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியமைப்பதில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவு தேவையானதாக இருந்தது.
காங்கிரஸுக்கு ஆதரவு: இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிப்பதாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியும் அறிவித்தன.
காங்கிரஸுக்கான ஆதரவு குறித்து மாயாவதி கூறுகையில், பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றவே தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம். காங்கிரஸின் சித்தாந்தங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லைதான். எனினும், பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்ற காங்கிரஸுக்கு ஆதரவளிக்கிறோம். தேவையேற்பட்டால், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிப்போம் என்றார்.
இதனிடையே, சுயேச்சைகளாக போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் 4 பேர் ஆதரவும் தங்களுக்கு கிடைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா கூறினார்.
ஆளுநருடன் சந்திப்பு: முன்னதாக, தேர்தல் முடிவு இறுதிசெய்யப்பட்ட நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங், அருண் யாதவ், விவேக் தன்கா ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் தலைவர்கள் குழு புதன்கிழமை மதியம் ஆளுநர் ஆனந்திபென்னை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது.
செளஹான் ராஜிநாமா: இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலால் ஏற்பட்ட திருப்பத்தை அடுத்து, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் அளித்தார்.
முன்னதாக, ராஜிநாமா கடிதம் அளிக்கும் முன்பு செளஹான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸுடன் ஒப்பிடுகையில் நாங்கள் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். எனினும், மக்களின் இந்தத் தீர்ப்பை மதிக்கிறோம். ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகளை நாங்கள் கைப்பற்றவில்லை. எனவே, பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன். மக்கள் எங்களிடம் அதிக அன்பு செலுத்தினார்கள். கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைத்தார்கள். காங்கிரஸின் வெற்றிக்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கமல்நாத்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சிவராஜ் சிங் செளஹான் கூறினார். இந்தத் தேர்தலில் பாஜக 41 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், காங்கிரஸ் 40.9 சதவீத வாக்குகளே பெற்றது. மத்தியப் பிரதேச முதல்வராக 3 முறை பதவி வகித்த சிவராஜ் சிங் செளஹான், அந்த மாநிலத்தில் நீண்டகாலம் ஆட்சிபுரிந்த (2005 முதல்) முதல்வராக இருந்தார்.
ராகுலுக்கு அதிகாரம்: இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத், திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 
புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கும் வகையில் கட்சி எம்எல்ஏக்களிடையே புதன்கிழமை மாலை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓஜா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com