மிஸோரம் முதல்வராக 15-இல் பதவியேற்கிறார் ஸோரம்தங்கா

மிஸோரம் சட்டப் பேரவைத் தேர்தலில் மிஸோ தேசிய முன்னணி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா, மாநில முதல்வராக வரும் 15-ஆம் தேதி
மிஸோரம் முதல்வராக 15-இல் பதவியேற்கிறார் ஸோரம்தங்கா


மிஸோரம் சட்டப் பேரவைத் தேர்தலில் மிஸோ தேசிய முன்னணி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா, மாநில முதல்வராக வரும் 15-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில், கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அங்குள்ள 40 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், முக்கிய மாநில கட்சியான மிஸோ தேசிய முன்னணி, 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் அக்கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. பாஜக ஒரு இடத்திலும், ஸோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. 
இதனிடையே, மிஸோ தேசிய முன்னணியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் புதிய முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்காவும், துணை முதல்வராக தான்லுயாவும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆளுநர் கும்மனம் ராஜசேகரனை சந்தித்த அவர்கள், ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதனடிப்படையில், மிஸோரமில் ஆட்சியமைக்க வருமாறு, ஸோரம்தங்காவுக்கு ஆளுநர் புதன்கிழமை முறைப்படி அழைப்பு விடுத்தார்.
15-இல் பதவியேற்பு விழா: இந்நிலையில், ஐஸாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 15-ஆம் தேதி மதியம் நடைபெறும் விழாவில் முதல்வராக ஸோரம்தங்கா பதவியேற்க உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மிஸோரமில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஆட்சியை பிடித்துள்ள மிஸோ தேசிய முன்னணி, ஆரம்பத்தில் பிரிவினைவாத இயக்கமாக செயல்பட்டது. பின்னர் 1986-ஆம் ஆண்டில் மிஸோ உடன்படிக்கையின் மூலம் வன்முறையை கைவிட்டு, அரசியல் கட்சியாக உருவெடுத்தது. இக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா (74), 1998 முதல் 2008 வரை மிஸோரம் முதல்வராக பதவி வகித்தவர். தற்போது மூன்றாவது முறையாக அவர் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com