மேக்கேதாட்டு: தமிழக வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் : மத்திய, கர்நாடக அரசுகளுக்கு நோட்டீஸ்

மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு
மேக்கேதாட்டு: தமிழக வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் : மத்திய, கர்நாடக அரசுகளுக்கு நோட்டீஸ்


மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
மேலும், தமிழக அரசின் மனு மீது பதிலளிக்க மத்திய, கர்நாடக அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு உடனடியாக தடை விதிக்க மறுத்துவிட்டது. 
இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தொடர்பான அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசு கடந்த மாதம் 30-ஆம் தேதியும், புதுச்சேரி அரசு டிசம்பர் 8-ஆம் தேதியும் மனு தாக்கல் செய்தன. மேலும், மத்திய, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கடந்த 5-ஆம் தேதி தொடுத்தது.
தமிழகம், புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்களில், மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த 22-ஆம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அனுமதி தொடர்பாக 22-ஆம் தேதியிட்ட கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெறவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே ஆஜராகி, மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இச்செயல் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தலையிடும் வகையில் உள்ளது. எனவே, அந்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் உதய ஹோல்லா, இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம், சில கட்டுப்பாடுகளுடன்தான் அனுமதி அளித்துள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், இந்த விவகாரத்தில் தமிழகத்தின் ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்படும். இந்த விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி, உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் வகையில் உள்ளதா? என்பது ஆராயப்படும். இந்த அனுமதி விவகாரம் தற்போது தொடக்க நிலையில் இருப்பதால், உடனடியாக எதுவும் நடந்துவிடாது. இந்த விவகாரத்தில் தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பாக மத்திய அரசும், கர்நாடக அரசும் ஜனவரி 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com