ராஜஸ்தானில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்! முதல்வரை ராகுல் முடிவு செய்கிறார்

ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், அங்கு ஆட்சியமைப்பதற்காக ஆளுநரை புதன்கிழமை சந்தித்து உரிமை கோரியது. அந்த மாநிலத்தின்
ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர். 
ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர். 


ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், அங்கு ஆட்சியமைப்பதற்காக ஆளுநரை புதன்கிழமை சந்தித்து உரிமை கோரியது. அந்த மாநிலத்தின் புதிய முதல்வரை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சித் தலைவர் ராகுலுக்கு வழங்கி, அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் கடந்த 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
200 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்திருந்த நிலையில், ஒரு தொகுதியின் வேட்பாளர் மரணமடைந்து விட்டதால், 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றதையடுத்து, ஆட்சியமைக்கத் தேவையான 100 இடங்கள் காங்கிரஸுக்கு கிடைத்தது.
அதேவேளையில், பாஜக 73 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்கள், சுயேச்சைகள் 13, மற்ற கட்சிகள் 5 இடங்களை கைப்பற்றின. தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: இந்நிலையில், காங்கிரஸ் புதிய எம்எல்ஏக்களின் கூட்டம், ஜெய்ப்பூரில் கட்சியின் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே, மேலிட பார்வையாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. 
முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ள கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட், கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, புதிய முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அனைத்து எம்எல்ஏக்களிடமும் கே.சி.வேணுகோபால், அவினாஷ் பாண்டே ஆகியோர் விவாதித்தனர்.
கருத்தொற்றுமை இல்லை?: புதன்கிழமை மாலை வரை நீடித்த இக்கூட்டத்தில், புதிய முதல்வரை முடிவு செய்வது குறித்து எம்எல்ஏக்களிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, புதிய முதல்வரை முடிவு செய்வதற்கான அதிகாரத்தை ராகுலுக்கு வழங்குவதாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து, அவினாஷ் பாண்டே, அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர், ஜெய்ப்பூரில் ஆளுநர் கல்யாண் சிங்கை, அவரது மாளிகையில் சந்தித்தனர். அப்போது, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை அவர்கள் உரிமை கோரினர்.
புதிய முதல்வர் இன்று முடிவு? ராஜஸ்தானின் புதிய முதல்வர் யார் என்பதை, கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை முடிவு செய்வார் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் தெரிவித்தார்.
7 முஸ்லிம் எம்எல்ஏக்கள் வெற்றி: இத்தேர்தலில் மொத்தம் 15 முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் களமிறக்கியிருந்தது. அதில், 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், காங்கிரஸ் (11), பாஜக (10), ராஷ்ட்ரீய லோக் தளம் (1) என மொத்தம் 22 பெண் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை, மொத்தம் 28 பெண் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருந்தனர். 
காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரிப்பு
ராஜஸ்தானில் கடந்த தேர்தலை (2013) ஒப்பிடும்போது, காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த முறை 33.71 சதவீத வாக்குகளை பெற்றிருந்த அக்கட்சி, இம்முறை 39.03 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 5.59 சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளன.
அதேவேளையில் பாஜகவின் வாக்கு சதவீதம், 46.05-இல் இருந்து 38.8ஆக குறைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு சதவீதம் 3.44-இல் இருந்து 4-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com