ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை உறுதி செய்ய முயற்சி

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய முயற்சிகள் எடுப்பேன் என்று அந்த வங்கியின் 25ஆவது ஆளுநராக புதன்கிழமை பொறுப்பேற்ற
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை உறுதி செய்ய முயற்சி


ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய முயற்சிகள் எடுப்பேன் என்று அந்த வங்கியின் 25ஆவது ஆளுநராக புதன்கிழமை பொறுப்பேற்ற முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு புதன்கிழமை சென்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பேன். முதல்கட்டமாக, அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். ரிசர்வ் வங்கியானது மிகச்சிறந்த அமைப்பாகும். அதன் இறையாண்மை, தன்னாட்சி, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய முயற்சி எடுப்பேன். நாட்டை ஆட்சி செய்யும் மத்திய அரசுதான், ரிசர்வ் வங்கியின் முக்கிய பங்குதாரர் மற்றும் உரிமையாளர் ஆகும். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகும். அதற்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டியுள்ளது என்றார்.
அப்போது அவரிடம், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்களால் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வாழ்த்து தெரிவித்து சுட்டுரையில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
ஐஏஎஸ் அதிகாரிகளில் தாஸ் மிகவும் மூத்தவர்; அதிக அனுபவம் கொண்டவர். தமது பதவிகாலம் முழுமைக்கும், மாநில, மத்திய அரசு துறைகளில் நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களில் அவர் பணிபுரிந்துள்ளார்.
உர்ஜித் படேல் ராஜிநாமாவை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் சக்திகாந்த தாஸ் நியமிக்க வேண்டியது அவசியமாகி விட்டது. அப்பதவிக்கு அவரே சரியான நபராவார். 
பல்வேறு அரசுகளின் ஆட்சியிலும் அவர் பணிபுரிந்துள்ளார். தனது திறமையையும் அவர் நிரூபித்துள்ளார். இந்தியா முன்புள்ள சவால்களை, ரிசர்வ் வங்கி ஆளுநர் என்ற முறையில் அவர் திறம்பட எதிர்கொள்வார் என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் அருண் ஜேட்லி.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், கடந்த திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அந்தப் பதவியில் முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலரான சக்திகாந்த தாஸை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசால் கடந்த 2016ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அந்நடவடிக்கையை சக்திகாந்த தாஸ் மேற்பார்வையிட்டார்.
அவர் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com