ஏடிஎம் மையங்களை மூட திட்டமா?: மத்திய அரசு பதில்

வங்கி ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் பொதுத் துறை வங்கிகளிடம் இல்லை என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா கூறியுள்ளார்.
ஏடிஎம் மையங்களை மூட திட்டமா?: மத்திய அரசு பதில்

வங்கி ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் பொதுத் துறை வங்கிகளிடம் இல்லை என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா கூறியுள்ளார்.
வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களின் நிர்வாக நடைமுறைகளில் கொண்டுவரப்படவிருக்கும் மாற்றங்களால் நாடு முழுவதும் சுமார் 1.13 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மூடப்பட வாய்ப்புள்ளதாக ஏடிஎம் இயந்திரங்களின் தொழிற்கூட்டமைப்பு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் உதிரி பாகங்கள், மென்பொருள் ஆகியவற்றை மேம்படுத்துதல், நிதி நிர்வாகத்தில் கடைப்பிடிக்கப்பட இருக்கும் புதிய நடைமுறைகள், ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் முறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் ஆகியவற்றால் ஏடிஎம் இயந்திரங்களை நிர்வகித்து வரும் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தப் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடி அளவுக்குப் பணம் தேவைப்படுகிறது. 
அவ்வளவு அதிகமான தொகை நிறுவனங்களிடம் இல்லை. இதனால், ஏடிஎம் இயந்திரங்களை மேம்படுத்த முடியாமல், அவற்றை மூடும் நிலைக்குத் தள்ளப்படும். முக்கியமாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏறத்தாழ 1.13 லட்சம் இயந்திரங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா, வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது: வங்கிகள், பணப் பட்டுவாடா வங்கிகள், சிறிய அளவிலான வங்கிகள் ஆகியவை அளித்த தகவல்படி,  நாடு முழுவதும் 2.21 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, வங்கிக் கிளைகள் மூலமாகவும், மைக்ரோ-ஏடிஎம் இயந்திரம் மூலமாகவும், இணைய வழியாகவும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஏற்கெனவே இயங்கி வரும் ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் வங்கிகளிடம் இல்லை என்று சிவ பிரதாப் சுக்லா பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com