நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு தயாரா?: காங்கிரஸ் சவால்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு தயாரா?: காங்கிரஸ் சவால்


ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.
மேலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக வெளியிட வேண்டியது, ஊடகங்களின் பொறுப்பு என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ரஃபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த நடைமுறை, இதர அம்சங்கள் குறித்த விவகாரங்களில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்க முடியாது; நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மூலமே உண்மைகள் வெளிவரும் என்று நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தோம். ரஃபேல் விமானத்தின் விலை விவரங்களை ஒப்பிட்டு பார்ப்பது தங்களது பணியல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, எங்களது கூற்றை நியாயப்படுத்துவதாக உள்ளது. ரஃபேல் போர் விமானத்தின் விலை நிர்ணய நடைமுறை, பிரான்ஸ் அரசின் உத்தரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவே விசாரிக்க முடியும். 
இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு தயங்குவது ஏன்? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அரைகுறையான தகவல்களையே தெரிவித்துள்ளது. அந்த தகவல்களும் ஆய்வுக்குள்படுத்தப்படவில்லை.
ரஃபேல் விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கத் தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் சவால் விடுக்கிறோம் என்றார் ரண்தீப் சுர்ஜேவாலா.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தவறான தகவல்களை பாஜக பரப்பி வருகிறது. எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, ஊடகங்கள் முழுமையாக வெளியிட வேண்டும். ரஃபேல் விமானத்தின் விலை 300 சதவீதம் அதிகரிக்கப்பட்டது ஏன்? முன்அனுபவம் இல்லாத, கடனில் தவிக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது ஏன்? பாதுகாப்புத் துறை கொள்முதல் விதிகளை பிரதமர் மோடி மீறியது ஏன்? ஆகிய கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வலியுறுத்துவோம்: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பை, பாஜக கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. ரஃபேல் விமானத்தின் விலை விவகாரம்தான் முக்கியப் பிரச்னை. அதில் தலையிட அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.
விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?: ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த தவறும் இல்லையென்றால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? என்று மத்திய அரசுக்கு மகாராஷ்டிர மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த்  பாட்டீல் கேள்வியெழுப்பியுள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "ரஃபேல் விவகாரத்தை, உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது சரியா? என்ற கேள்வியெழுகிறது. சில விவகாரங்களுக்கு, நீதிமன்றத்தைவிட, அரசியல் களத்தில்தான் நல்ல தீர்வு கிடைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தங்கள் வேண்டும்: பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் வெளிப்படையாகவும் சந்தேகமின்றியும் அமையும் வகையில், துறைரீதியிலான அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com