பாகிஸ்தானைச் சேர்ந்த 83 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த 83 ஹிந்துக்களுக்கு குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த 83 ஹிந்துக்களுக்கு குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.
ஆமதாபாதில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 83 ஹிந்துக்களுக்கு ஆட்சியர் விக்ராந்த் பாண்டே மற்றும் அந்த தொகுதி எம்எல்ஏ பல்ராம் தவானி ஆகியோர் இந்தியக் குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கினர். அதில் பெரும்பாலானோர் சிந்தி மற்றும் மகேஷ்வரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் விதிகளின் படி அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. 
இதுதொடர்பாக ஆட்சியர் பாண்டே கூறியதாவது:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்து வரும் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு, மாவட்ட ஆட்சியர்களும் குடியுரிமை வழங்கலாம் என்று 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தின் படி, இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதற்கு முன்னதாக 400 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த 83 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. காந்திநகர் மற்றும் கட்ச் மாவட்ட ஆட்சியர்களும் இந்த சட்டத்தின் மூலமாக மக்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளனர்.
இந்த சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக குஜராத் திகழ்கிறது. 
குடியுரிமை கேட்டு இந்த ஆண்டு மட்டும் 280 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நீண்ட காலம் காத்திருப்பில் வைக்காமல் அனைவருக்கும் விரைவில் குடியுரிமை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.
குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் கூறுகையில், " பாகிஸ்தானில் ஹிந்துக்களை அவமதித்ததால் 7 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தேன்.
ஹிந்துக்களாக இருப்பதால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்கள் வற்புறுத்தினர். எங்கள் வீட்டு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அங்கு பாதுகாப்பு இல்லாததால் இந்தியா 
வந்தடைந்தோம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com