மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் டிசம்பர் 17-இல் பதவியேற்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் (72)  வரும் 17-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் டிசம்பர் 17-இல் பதவியேற்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் (72)  வரும் 17-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. அதையடுத்து மத்தியப் பிரதேச முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, கமல்நாத்தை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது.
கட்சித் தலைமையின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு அந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கமல்நாத் ஆளுநர் ஆனந்திபென் படேலை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.  பின்னர்,  மாநிலத்தில் ஆட்சி அமைக்க வருமாறு கமல்நாத்துக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து கமல்நாத் பேசுகையில், வரும் 17-ஆம் தேதி போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக 9 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்நாத்,  கடந்த ஏப்ரல் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றினார்.
230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 109 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன. 4 சுயேச்சை எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், சமாஜவாதியின் எம்எல்ஏ ஆகியோருடன் சேர்த்து 121 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com