ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்

நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 5,000 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்பட்டிருப்பதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 5,000 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்பட்டிருப்பதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், வதோதராவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை பியூஷ் கோயலும், முதல்வர் விஜய் ரூபானியும் நாட்டுக்கு சனிக்கிழமை அர்ப்பணித்தனர். இந்த விழாவில் பியூஷ் கோயல் பேசியதாவது:
ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அங்கு பணியாளர்களை நியமிப்பது,  மேம்பாலம், சுரங்க பாதை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி ஆண்டுதோறும் 1,200 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் முன்பு அகற்றப்பட்டன.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு, குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளை அகற்ற இலக்கு நிர்ணயித்து செயல்படும்படி ரயில்வே அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் இருந்தன. அவை அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு விட்டன. இதில் 3,000 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் மட்டும் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் அகற்றப்பட்டுள்ளன.
அகண்ட ரயில் பாதைகளில் வெறும் 100 முதல் 200 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளே தற்போது உள்ளன.  தொழில்நுட்ப பிரச்னைகளால் அவை நீக்கப்படவில்லை. விரைவில் அவையும் அகற்றப்படும்.
புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது சரியில்லை. இந்தியாவில் தற்போது அதிவேகமாக செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் தீட்டப்பட்டபோதும் இதேபோல்தான் எதிர்ப்பு எழுந்தது. ரயில்வே வாரியத் தலைவரே அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக்கப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் 13 லட்சம் பேருக்கு, ரயில்வே வாரியம் ஒரு வார காலம் பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளது. இது இந்திய ரயில்வேயை உலகின் சிறந்த ரயில்வேயாக உருவெடுக்க வழிவகுக்கும் என்றார் அவர்.
ரயில்வே பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 20 மாநிலங்களில் இருந்து 103 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பிஎஸ்சி போக்குவரத்து தொழில்நுட்பம், 
பிபிஏ போக்குவரத்து மேலாண்மை ஆகிய பாடங்கள் நடத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com