கர்நாடகத்தில் கோயில் திருவிழாவில் உணவு உண்டு உயிரிழந்த விவகாரம்: விசாரணைக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு

கர்நாடகத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் உணவு உண்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் கோயில் திருவிழாவில் உணவு உண்டு உயிரிழந்த விவகாரம்: விசாரணைக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவு

கர்நாடகத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் உணவு உண்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சாமராஜ்நகர் மாவட்டம், ஹனூர் வட்டத்தின் சுல்வாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் டிச. 14-ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவில் பரிமாறப்பட்ட உணவை உண்ட நூற்றுக்கணக்கானோரில் 11 பேர் உயிரிழந்தனர்.  
மேலும்,  மைசூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 94 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களில் 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
விசாரணைக்கு உத்தரவு: கோயில் திருவிழாவில் உணவு உண்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ள முதல்வர் குமாரசாமி,  மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் முழுச் செலவினங்களையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்திருக்
கிறார்.
இதனிடையே,  சாமராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் புட்டரங்க ஷெட்டி,  சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சி.எஸ்.புட்டராஜு,  மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை தொலைபேசி வழியாக தொடர்புகொண்ட முதல்வர் குமாரசாமி,  உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது பற்றியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் நிலைமை குறித்தும் கேட்டறிந்தார்.
    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, இதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து அறிக்கை அளிக்கும்படி காவல் துறையினருக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே,  இந்த விவகாரத்தை நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு பாஜக முன்னாள் அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ்,  கர்நாடக அரசை கேட்டுக் கொண்டார்.
அமைச்சர்கள் ஆய்வு: சாமராஜ்நகர் மாவட்ட பொறுப்பு  அமைச்சர் புட்டரங்க ஷெட்டி, கோயில் திருவிழாவில் உணவு உண்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு சனிக்கிழமை ஆறுதல் கூறினார். மேலும், மைசூரில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.  
இதனிடையே, சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சி.எஸ்.புட்டராஜு,  பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. என்.மகேஷ் உள்ளிட்டோர் சுல்வாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். சமையலறை, கோயில் வளாகத்தையும் ஆய்வுசெய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் புட்டராஜு, " கோயில் அறக்கட்டளையை நிர்வகித்துவரும் இரு குடும்பங்களுக்கு இடையிலான சண்டையில் ஒரு குடும்பத்தினர், மற்றொரு குடும்பத்தினரின் நற்பெயரைக் கெடுக்க உணவில் நஞ்சை கலந்துள்ளதாக மேலோட்டமாக விசாரித்ததில் தெரியவந்துள்ளது.  தவறிழைத்தவர்களைக் கைது செய்து, தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார் அவர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திரகுமார் மீனா, தென் சரக ஐ.ஜி.பி. சரத் சந்திரா உள்ளிட்ட உயர் காவல் துறை அதிகாரிகள் கோயில் வளாகத்தை ஆய்வு செய்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்ட தக்காளிச் சோறு,  சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 
மருத்துவமனையில் பார்வை: இதனிடையே, மைசூரில் உள்ள பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 94 பேரை மைசூரு மாவட்ட ஆட்சியர் பி.பி.காவேரி சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.  மேலும், அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது காவேரி கூறுகையில், " பல்வேறு மருத்துவமனைகளில் 11 குழந்தைகள் உள்பட 94 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இவர்களில் 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  இச் சம்பவம் தொடர்பாக  2 பேரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com