சத்தீஸ்கர் முதல்வர் யார்?: இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் சார்பில் யார் பதவியேற்க போகிறார்கள்? என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு காங்கிரஸ் கட்சியால் ஞாயிற்றுக்கிழமை (டிச.16) வெளியிடப்பட

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் சார்பில் யார் பதவியேற்க போகிறார்கள்? என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு காங்கிரஸ் கட்சியால் ஞாயிற்றுக்கிழமை (டிச.16) வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு யாரையும் முன்னிறுத்தி காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், முதல்வர் குறித்து இன்னமும் அக்கட்சியால் முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பூபேஷ் பாகேல், டி.எஸ். சிங் தேவ், தம்ராத்வாஜ் சாகு, சரண் தாஸ் மகந்த் ஆகிய 4 பேர் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவுகிறது.
தில்லியில் இவர்கள் 4 பேருடனும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் சத்தீஸ்கரில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் ஞாயிற்றுக்
கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கூட்டத்தில் முதல்வர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் எம்எல்ஏக்களில் ஒருதரப்பினர் டி.எஸ். சிங் தேவுக்கும், மற்றோர் தரப்பினர் பாகேலுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டி.எஸ். சிங் தேவுக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வென்றது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜகவால் 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
76 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்: சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் 76 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அதாவது, 90 எம்எல்ஏக்களில் 68 பேர் ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு அதிக மதிப்புடைய சொத்துகளின் உரிமையாளர்களாக உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com