தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார்: பிரகாஷ் ஜாவடேகர்

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும், அது எந்நேரமும் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படலாம் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார்: பிரகாஷ் ஜாவடேகர்

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும், அது எந்நேரமும் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படலாம் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
கோவா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக, கே.கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து முடித்து விட்டது.
கல்வி எளிதில் கிடைக்க வேண்டும்; குறைந்த செலவில் கிடைக்க வேண்டும், கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும், கல்வி தரமானதாக இருக்க வேண்டும், பொறுப்புணர்வை அளிப்பதாக இருக்க வேண்டும் ஆகிய ஐந்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் தொடக்க கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இந்தக் கொள்கையின் வரம்புக்குள் வரும். இந்தக் கொள்கை, நமது கல்வி முறையில் புதியதொரு திசையையும், உணர்வையும் நமக்கு அளிக்கும்.
கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயாரான விஷயத்தை கஸ்தூரிரங்கன் குழு சனிக்கிழமைதான் என்னிடம் தெரிவித்தது. அந்த வரைவு அறிக்கையை, அந்தக் குழு எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசிடம் தாக்கல் செய்யும். அந்தக் கொள்கைக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டிய தேதி, அந்தக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய தேதி ஆகியவற்றை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்யும்.
முகநூல், சுட்டுரை(டுவிட்டர்), கட்செவி அஞ்சல்(வாட்ஸ்-அப்) உள்ளிட்ட செயலிகள் தயாரிப்பிலும், ஐ ஃபோன் உள்ளிட்ட அறிதிறன் கொண்ட செல்லிடப்பேசி தயாரிப்பிலும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இருப்பினும், இந்திய ஆய்வாளர்கள் புதுமைக் கண்டுபிடிப்புகளின் பங்களிப்பாளர்களாகவே உள்ளனர். அவர்கள் கண்டுபிடிப்புகளின் உரிமையாளர்கள் கிடையாது. இந்த நிலை மாற வேண்டும்.
பள்ளிகளில் இருந்தே புதுமை கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்காகவே, 3,000-க்கும் அதிகமான பள்ளிகளில் புதுமை கண்டுபிடிப்புகள் இயக்கத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள், முப்பரிமாண அச்சு, ரோபோட்டிக் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை தொடர்பான கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கலாம்.
இதேபோல், கல்லூரி அளவில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, "ஹேக்கத்தான்' போட்டியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2016-இல் முதல் முறையாக, இந்தப் போட்டி நடத்தப்பட்டபோது, அதில், 40,000 மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். நிகழாண்டில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆராய்ச்சி மாணவர்கள் நல்ல நூல்களைத் தேடி அலைவதைக் குறைப்பதற்காக, தேசிய டிஜிட்டல் நூலகம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் கீழ் ஒருவர் தனது கணினி அல்லது  செல்லிடப்பேசி வழியாக 1.65 கோடி நூல்களை இலவசமாகப் பெற முடியும். எதிர்காலத்தில் சிறிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கென தனி தரவரிசை தயாரிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com