மிஸோரம் முதல்வராக ஸோரம்தங்கா பதவியேற்பு

மிஸோரம் மாநிலத்தின் முதல்வராக மிஸோ தேசிய முன்னணி கட்சியின்(எம்என்எஃப்) தலைவர் ஸோரம்தங்கா சனிக்கிழமை பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
மிஸோரம் மாநில தலைநகர் ஐஸாலில் உள்ள ஆளுநர் மாளிகையில்,  மிஸோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா  முதல்வராக பதவியேற்ற பிறகு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன். நாள்: சனி
மிஸோரம் மாநில தலைநகர் ஐஸாலில் உள்ள ஆளுநர் மாளிகையில்,  மிஸோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா  முதல்வராக பதவியேற்ற பிறகு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன். நாள்: சனி

மிஸோரம் மாநிலத்தின் முதல்வராக மிஸோ தேசிய முன்னணி கட்சியின்(எம்என்எஃப்) தலைவர் ஸோரம்தங்கா சனிக்கிழமை பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
ஐஸாலில் உள்ள ஆளுநர் மாளிகையில், மிஸோ மொழியில் உறுதிமொழி எடுத்து ஸோரம்தங்கா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து துணை முதல்வராக தான்லுயா பதவியேற்றார். அவருடன் 5 கேபினட் அமைச்சர்களும், 6 இணையமைச்சர்களும் பதவியேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசீய கீதம் இசைத்த பிறகு,  பைபிளில் இருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பின்னர் பதவிப் பிரமாண மற்றும் ரகசிய காப்புப் பிரமாண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லா, அவரது மனைவி, அஸ்ஸாம் முதல்வர் கன்ராட் சங்மா ஆகியோர் பங்கேற்றனர்.
இதற்கு முன்னர் 1998 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மிஸோ தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற்று ஸோரம்தங்கா முதல்வராக பதவி வகித்தார். அதன் பின்னர் 2008-ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சி மிஸோரம் மாநிலத்தில் ஆட்சி புரிந்தது. 
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மிஸோ தேசிய முன்னணி கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. அதையடுத்து ஸோரம்தங்கா 3-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
மிஸோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின் முடிவுகள் கடந்த 11-ஆம் தேதி வெளியானது.   இதில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 26 தொகுதிகளில் மிஸோ தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மை பலத்துடன் அக்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த முறை 34 இடங்களை கைப்பற்றியிருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவோம்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில், மிஸோ தேசிய முன்னணி கட்சி இடம் பெற்றுள்ளது. கிறிஸ்தவ மத மக்கள் அதிகமாக வசிக்கும் மிஸோரத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதற்காக மிஸோ தேசிய முன்னணி கட்சி பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. எனினும், அந்த கூட்டணிகளில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடருவோம் என்றும் மிஸோரம் முதல்வராக பதவியேற்ற பிறகு ஸோரம்தங்கா தெரிவித்தார். 
பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம்: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கே தங்களது ஆட்சியில் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஸோரம்தங்கா கூறினார். விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளதால் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முன்னுரிமை வழங்கப்படும். அதன் மூலம் நாட்டில் அதிகபட்ச தனி நபர் வருமானம் இருக்கும் மாநிலமாக மிஸோரம் மாறும் என்றார். 
மறுவாழ்வு மையம்: போதைப் பொருள் மற்றும் மது விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வகையில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று ஸோரம்தங்கா கூறினார்.
மேலும், 2008-ஆம் ஆண்டு கூறியபடி, ஹாதியால், காஸால் மற்றும் சைதுவால் பகுதிகள் தனித்தனி மாவட்டங்களாக அறிவிக்கப்படும். 
மோசமாக உள்ள சாலைகளின் தரம் மேம்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில் மேம்பாலங்களும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் அமைக்கப்படும் என்று கூறினார்.
முதல்முறை: மிஸோரம் மாநில முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்முறையாக 2 நிகழ்வுகள் நடைபெற்றன. பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, பைபிள் வாசித்து பிரார்த்தனை நடைபெற்றதும், அமைச்சர்கள் மிஸோ மொழியில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றதும் இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com