விரைவு வழி, நீர்வழித்தட திட்டங்களில் முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு

விரைவு வழி, நீர்வழித்தட திட்டங்கள், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் போன்றவற்றில் பெருவாரியாக முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்
விரைவு வழி, நீர்வழித்தட திட்டங்களில் முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு

விரைவு வழி, நீர்வழித்தட திட்டங்கள், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் போன்றவற்றில் பெருவாரியாக முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) கூட்டத்தில் காணொலிக்காட்சியின் வாயிலாக அவர் பேசியதாவது:
தில்லி நகரைச் சுற்றி அமையவுள்ள விரைவுவழித்தடம் வாயிலாக, அங்கு வாகனங்கள் மூலம் ஏற்படும் காற்று மாசுபாடு 60 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிடும். பெங்களூரு-சென்னை இடையேயான விரைவுவழித்தடம் ஜனவரி முதல் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வரும். மும்பை- தில்லி இடையேயான 12 வழி விரைவுச்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலை மூலம், இரு நகரங்களுக்கும் இடையேயான தொலைவு சுமார் 120 கி.மீ. வரை குறையும்.
நீர்வழி மற்றும் விரைவுவழித்தடத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் ஆகியவற்றில் தனியார் நிறுவனங்கள் பெருவாரியாக முதலீடு செய்ய வேண்டும். விரைவுவழித்தடம் அமைக்க கி.மீ. ஒன்றுக்கு ரூ.7.5 கோடியாக இருந்த நிலம் கையகப்படுத்தும் தொகையை, ரூ.80 லட்சமாக மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழிலாளருக்கு செலவு செய்யப்படும் தொகையும் குறைவாகவே உள்ளது. தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிறுவனங்களுக்கான போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் வகையில், இயற்கை எரிவாயு, எத்தனால் போன்றவற்றை வாகனங்களில் பயன்படுத்த வேண்டும். நாட்டிலுள்ள 111 நதிகளில் நீர்வழிப்போக்குவரத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து செலவைக் குறைக்கும் நீர்வழிப்போக்குவரத்தை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவற்காக தொடங்கப்பட்ட 280 திட்டங்களில், 10 முதல் 15 சதவீதம் வரையிலான திட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கங்கை நதியின் 80 சதவீதப் பகுதிகள் தூய்மை அடைந்துவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் கங்கை நதி முழுவதும் தூய்மை அடைந்துவிடும். இந்தத் திட்டங்களுக்காக தனியார் நிறுவனங்கள் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். இதன்மூலம், கங்கை நதியின் கரையோர மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது உறுதிசெய்யப்படும்.
யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com