காந்தி விரும்பியது போலவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவை விரும்புகிறேன்: மாநிலங்களவையில் மோடி பேச்சு  

சுதந்திரத்திற்குப் பின்னர் காந்தி விரும்பியது போலவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவையே தானும்  விரும்புவதாக, புதன்கிழமையன்று மாநிலங்களவையில் மோடி பேசினார்.
காந்தி விரும்பியது போலவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவை விரும்புகிறேன்: மாநிலங்களவையில் மோடி பேச்சு  

புதுதில்லி: சுதந்திரத்திற்குப் பின்னர் காந்தி விரும்பியது போலவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவையே தானும்  விரும்புவதாக, புதன்கிழமையன்று மாநிலங்களவையில் மோடி பேசினார்.

மக்களவையில் புதன்கிழமையன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே, பிரதமர் மோடி காரசார உரையாற்றினார். அதில், கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி எதை விதைத்ததோ, அதைத்தான் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் எனது உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வேதனையளிக்கிறது.

காங்கிரஸ் கட்சியினரின் தவறுகளுக்கு நாட்டு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள். பாஜக புதிய மாநிலங்களை உருவாக்கியது. காங்கிரஸோ நாட்டை பிளவுபடுத்தியது. காங்கிரஸ் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவில்லை, ஒரு குடும்பத்தை மட்டுமே வளர்க்கிறது.

காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையால் மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். கடந்த ஆட்சி காலத்தில் நடந்த பாவங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்று ஆவேசமாகப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதமர் மோடி அதன் மீது உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

நீங்கள் மகாத்மா காந்தியின் இந்தியாவை விரும்புகிறீர்கள். நானும் காந்தியின் இந்தியாவையே விரும்புகிறேன்.  காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர், "இப்பொழுது நாடு விடுதலை அடைந்து விட்டது; எனவே காங்கிரசைக் கலைத்து விடலாம்" என்று கூறினார்.அவர் விரும்பியது போலவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவையே நானும்  விரும்புகிறேன்.

காங்கிரசும் இந்திரா காந்தியின் இந்தியாவை விரும்புகிறது. ஆனால் நெருக்கடி நிலை, போபர்ஸ் ஊழல் மற்றும் விமான பேர ஊழல்கள் நிரம்பிய இந்தியாவைத்தான் அது விரும்புகிறது. மேலும் சீக்கியர்கள் கொல்லப்படுகின்ற..போபால் விஷவாயு வழக்கு குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுகின்ற ஒரு இந்தியாவைத்தான் இங்கு அமர்ந்திருப்பவர்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு மோடி பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com