உ.பி. பேரவையில் ஆளுநர் உரையின்போது எதிர்க்கட்சிகள் அமளி

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் ஆளுநர் ராம் நாயக் உரையாற்றும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் ஆளுநர் ராம் நாயக் உரையாற்றும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. எதிர்வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், வரும் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முழுமையாகத் தாக்கல் செய்யப்பட இருக்கும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இந்நிலையில், கூட்டத் தொடரின் முதல் நாளான வியாழக்கிழமை, பாரம்பரிய முறைப்படி, பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் ராம் நாயக் உரையாற்றினார். அவர் உரையாற்றத் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் மாநிலத்தில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன என்று ஆளுநர் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளைத் தடுப்பதற்காக, ரோமியோ தடுப்புப் படை அமைக்கப்பட்டது என்று ராம் நாயக் கூறினார். அதற்கு, மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்புடன் இல்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறி கூச்சலிட்டனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதுபோல், உத்தரப் பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதை ஆளுநர் குறிப்பிட்டார். அப்போது, சமாஜவாதி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், மாநிலத்தில் கல்வி, விவசாயம், மருத்துவம், மின்சாரம், தொழில்துறை ஆகிய துறைகளில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஓராண்டில் முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களை ஆளுநர் குறிப்பிட்டார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால், அவர் பேசியது யாருக்கும் தெளிவாகக் கேட்கவில்லை. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், பேரவையில் பலூன் ஒன்றைப் பறக்கவிட்டார். சிலர் ஆளுநரின் இருக்கையை நோக்கி காகிதப் பந்துகளை வீசினர்.
"நீங்கள் அனைவரும் நாகரிக சமூகத்தின் பிரதிநிதிகள்' என்று நயமுடன் ஆளுநர் எச்சரித்தார். ஆனால், அதை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து பிரச்னை எழுப்பினர். மொத்தத்தில் அவர் உரையை முடிக்கும் வரை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத் தொடரில், அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com