ஏர்செல்-மேக்சிஸ் விசாரணை அறிக்கை ப.சிதம்பரத்துக்கு கிடைத்தது எப்படி? 

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த 2013-ஆம் ஆண்டு தயாரித்த விசாரணை அறிக்கை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்த உள்முக
ஏர்செல்-மேக்சிஸ் விசாரணை அறிக்கை ப.சிதம்பரத்துக்கு கிடைத்தது எப்படி? 

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த 2013-ஆம் ஆண்டு தயாரித்த விசாரணை அறிக்கை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்த உள்முக விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி 13-ஆம் தேதி சிதம்பரத்துக்கு சொந்தமாக தில்லி, சென்னையில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, தில்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து சிபிஐ விசாரணை அறிக்கையின் நகல்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் வீட்டில் இருந்து சிபிஐ விசாரணை அறிக்கை நகல்கள் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, இந்த அறிக்கையைதான் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது. சிதம்பரம் வீட்டில் இருந்து தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களில் சிபிஐ விசாரணை அறிக்கையின் நகல்களும் இருந்தது என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் சிபிஐ-க்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இது தொடர்பாக தங்கள் அதிகாரிகள் வட்டத்திலேயே உள்முக விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தரப்பில் இருந்துதான் இந்த அறிக்கையின் நகல் கசிந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சிபிஐ விசாரணை அறிக்கையின் நகல்கள் சிதம்பரத்தின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "இந்த வழக்குகள் தொடர்பாக பதிலளிக்க விரும்பவில்லை' என்று அவர் தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பாக சிதம்பரத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அமைப்புகள் கேள்வி எழுப்பினால் சிதம்பரம் உரிய பதிலளிப்பார்' என்றனர்.
முன்னதாக, கடந்த ஜனவரி 13-ஆம் தேதியன்று அமலாக்கத் துறையினர் தனது வீடுகளில் சோதனை நடத்தியது குறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், "எனது தில்லி வீட்டில் சோதனை நடத்திய பிறகு மிகுந்த தர்மசங்கடத்துடன்தான் அமலாக்கத் துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். அவர்கள் எனது வீட்டில் இருந்து எதையும் கைப்பற்ற முடியவில்லை. எனினும், தங்கள் சோதனையை நியாயப்படுத்துவதற்காக, அரசு சார்பில் கடந்த 2012-13-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட சில தகவல்கள் அடங்கிய ஆவணங்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்' என்று தெரிவித்திருந்தார்.
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு பெற்றுத்தர தனது தந்தையின் அமைச்சர் பதவியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது தொடர்பான கருப்புப் பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
மாநிலங்களவையில்...: இந்த விவகாரம் மாநிலங்களவையிலும் வியாழக்கிழமை எதிரொலித்தது. மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்து சிதம்பரம் பேசி முடிந்த பிறகு பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ் இது தொடர்பாகக் கூறுகையில், "முந்தைய காங்கிரஸ் அரசில் முக்கியான துறைக்கு அமைச்சராக இருந்த சிதம்பரம், தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com