சிஎஸ்டி இழப்பீடு நிதி விரைந்து வழங்க மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

சரக்கு சேவை வரி அமல் காரணமாக தமிழகத்துக்கு தர வேண்டிய சிஎஸ்டி இழப்பீட்டு நிதி ரூ.5,572 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வியாழக்கிழமை வலியுறுத்தியது.

சரக்கு சேவை வரி அமல் காரணமாக தமிழகத்துக்கு தர வேண்டிய சிஎஸ்டி இழப்பீட்டு நிதி ரூ.5,572 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வியாழக்கிழமை வலியுறுத்தியது.
மக்களவையில் வியாழக்கிழமை பொது பட்ஜெட் 2018-2019 மீதான விவாதத்தில் பங்கேற்று அதிமுக உறுப்பினர்கள் பேசினர். அவர்களது பேச்சு விவரம்:
தென் சென்னை தொகுதி எம்.பி. டாக்டர் ஜெ.ஜெயவர்தன்: மத்திய பொது பட்ஜெட் விவசாயம், ஊரக மேம்பாடு, சுகாதாரத் துறையை மையப்படுத்தி வளர்ச்சி மற்றும் சமநிலை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தமட்டில், பல்வேறு விஷயங்கள் மத்திய அரசு மூலம் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதிப் பங்களிப்பு 75 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) இழப்பீடாக ரூ.5,572 கோடியை வழங்க வேண்டும் மத்திய நிதி அமைச்சகம் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.அசோக்குமார்: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவகம் திட்டம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற திட்டமாகும். இந்தியா மற்றும் உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வல்லுநர்கள், அரசுகள் இத்திட்டத்தை ஆய்வு செய்துள்ளன. எனவே, இத்திட்டத்தை ஒரு முன்மாதிரி திட்டமாக நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூரில் விமான நிலையத்தை விரைவில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரணி தொகுதி எம்.பி. வி.ஏழுமலை: திண்டிவனம் - நகரி, திண்டிவனம் -திருவண்ணாமலை இடையே புதிய ரயில்வே வழித்தடம் அமைக்கும் திட்டங்களை விரைந்து முடிக்க தேவையான நிதிûயை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நாமக்கல் தொகுதி எம்.பி. பி.ஆர்.சுந்தரம்: வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, அடிப்படைக் கட்டமைப்பு துறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. . எனினும், அதிவேகமாக விரிவடைந்து வரும் சென்னை குறித்து பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. சென்னையின் புறநகர் ரயில் அமைப்பை வலுப்படுத்துவது அவசியமாகும். 
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. கே.என்.ராமச்சந்திரன்: ரயில்வே திட்டங்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான தொகையாகும். இந்த நிதி போதுமானதாக இல்லை. தமிழகம் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனது தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் பல தொழில் நிறுவனங்கள் உள்ளன.இதனால், ஸ்ரீபெரும்புதூர்- -பெங்களூரு தொழிலகப் பாதை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகிறோம். மத்திய அரசு அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com