ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ஹரியாணாவில் காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஹரியாணாவில் காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவை கூடியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம்.ஒய்.தாரிகாமி, தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர் அலி முகமது சாகர் ஆகியோர் மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தை எழுப்பினர். அலி முகமது சாகர் கூறியதாவது:
ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகம் அருகே காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரை சில மாணவர்கள் புதன்கிழமை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுபோன்றதொரு சம்பவம் நிகழ்வது, இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ராஜஸ்தானிலும், பிற மாநிலங்களிலும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது. காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக, பிற மாநிலங்களில் அவதூறாந தகவல்கள் பரப்பப்படுகின்றன. மத்தியில் ஆளும் அரசின் ஆதரவுடனே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
எனவே, மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் இந்தப் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். 
காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பிற மாநிலங்களில் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பதையும் அவர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று அலி முகமது சாகர் கூறினார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை பேரவைத் தலைவர் நிராகரித்து 
விட்டார். அதையடுத்து, அவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com