மாலத்தீவு சிறப்புத் தூதர் இந்தியா வருவதில் சிக்கல்

மாலத்தீவில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியதால் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம், இந்தியாவுக்கு சிறப்புத் தூதரை அனுப்ப முடிவு செய்துள்ளார்.
மாலத்தீவு சிறப்புத் தூதர் இந்தியா வருவதில் சிக்கல்

மாலத்தீவில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியதால் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம், இந்தியாவுக்கு சிறப்புத் தூதரை அனுப்ப முடிவு செய்துள்ளார்.
ஆனால், தூதரை அனுப்ப மாலத்தீவு முடிவு செய்த தேதி இந்தியத் தரப்புக்கு ஏற்புடையதாக இல்லாததால் பிரச்னை நீடித்து வருகிறது என்று தில்லியில் உள்ள இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் நெருக்கடி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் யாமீன் கயூம் அண்மையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், முன்னாள்அதிபரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
இதனிடையே, இந்தச் சூழலுக்குத் தீர்வு காண இந்தியா ராணுவரீதியாக உதவியளிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இந்திய ராணுவம் தலையிடுவதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்தது. இந்நிலையில், தங்கள் நாட்டில் எழுந்துள்ள பிரச்னை குறித்து அதிபர் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்காக அந்நாட்டில் இருந்து சீனா, பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சிறப்புத் தூதர்களை அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது.
அதேபோல மாலத்தீவு வெளியுறவு அமைச்சரை சிறப்புத் தூதராக இந்தியாவுக்கு அனுப்ப மாலத்தீவு அதிபர் அப்துல் யாமீன் கயூம் முடிவு செய்தார். ஆனால், அவரது இந்திய வருகையில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் தில்லி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது கூறுகையில், "இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இப்போது நாட்டில் இல்லை. பிரதமர் மோடியும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல இருக்கிறார். எனவே, மாலத்தீவு நிலை குறித்து சிறப்புத் தூதரை அனுப்பி விளக்கமளிக்க தேதியை முடிவு செய்வதில் பிரச்னை உள்ளது' என்றார்.
ஆனால், எதற்காக இந்தியாவுக்கு சிறப்புத் தூதர் அனுப்பப்படுகிறார் என்பது குறித்து உரிய முறையில் இந்தியாவிடம் மாலத்தீவு தரப்பு விளக்கவில்லை என்பதே அந்நாட்டு தூதரின் வருகையை இந்தியா ஏற்காததற்கு காரணம் என்று தெரிகிறது. மாலத்தீவில் அதிபர் யாமீன் கயூம் தன்னிச்சையாக நெருக்கடி நிலையை அமல்படுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் அதிபர் ஆகியோரை கைது செய்தது இந்தியத் தரப்புக்கு ஏற்படையதாக இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சீனாவுக்கு மிக நெருக்கமாக மாலத்தீவு செயல்பட்டு வருவதும் அந்நாட்டு சிறப்புத் தூதரை இந்தியா தவிர்ப்பதற்கு மற்றொரு காரணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com