விவசாயிகள் பிரச்னை போன்ற முக்கிய விவகாரங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் தீர்வு இல்லை: தினேஷ் திரிவேதி

விவசாயிகள் பிரச்னை போன்ற முக்கிய விவகாரங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் தீர்வு இல்லை என்றும் பட்ஜெட் வார்த்தை ஜாலங்களால் நிறைந்துள்ளது என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி குற்றம்சாட்டினார்.
விவசாயிகள் பிரச்னை போன்ற முக்கிய விவகாரங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் தீர்வு இல்லை: தினேஷ் திரிவேதி

விவசாயிகள் பிரச்னை போன்ற முக்கிய விவகாரங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் தீர்வு இல்லை என்றும் பட்ஜெட் வார்த்தை ஜாலங்களால் நிறைந்துள்ளது என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி குற்றம்சாட்டினார்.
மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பிரதமர் பேசும்போது முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் குறித்து தெரிவித்த கருத்துகளை நான் ஏற்கவில்லை. மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் அவை பாரபட்சமானதாக இருக்கக் கூடாது. ராஜீவ் காந்தி இந்த நாட்டுக்காக தனது உயிரைத் தியாகம் செய்தார். அதேபோல் இந்திரா காந்தியும் நாட்டுக்காகவே உயிர் நீத்தார்.
மேற்கு வங்க மாநிலமானது இந்த நாட்டில் பல்வேறு விஷயங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அந்த விவகாரங்களில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் நிதியமைச்சர் அமித் மித்ராவின் கருத்துகளை மத்திய அரசு கேட்டறிய வேண்டும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (ஜிடிபி) பாதித்துள்ளன. மத்திய பட்ஜெட் வார்த்தை ஜாலங்களால் நிறைந்துள்ளது. அதில், விவசாயிகள் பிரச்னை, மக்களுக்கு சிறப்பான மருத்துவச் சேவைகள், கல்வி ஆகிய விவகாரங்களுக்குத் தீர்வு இல்லை என்றார் தினேஷ் திரிவேதி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலிதளம் கட்சி எம்.பி. பிரேம் சிங் சந்துமாஜ்ரா பேசுகையில் "வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகள் போதுமான கவனம் செலுத்தவில்லை. இந்த விவகாரம் பற்றி மட்டுமே பேசுவதற்கு ஒரு சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும்' என்றார்.
பாஜக எம்.பி. கணேஷ் சிங் பேசும்போது பட்ஜெட்டை ஆதரித்து கருத்து தெரிவித்தார். அவர் பேசியதாவது: பிரதமர் எழுப்பிய கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் பதிலளிக்க வேண்டும். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நீங்கள் (காங்கிரஸார்) கேள்வி கேட்கிறீர்கள். ஆனால், போஃபர்ஸ் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் குறித்து யார் பதிலளிப்பது?
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல்வேறு தவறுகள் நடைபெற்றன. தற்போது பிரதமர் இந்த நாட்டை வளர்ச்சிப் ûபாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார். நாட்டு மக்கள் பிரதமர் எடுக்கும் நடவடிக்கைகளை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர் என்றார் கணேஷ் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com