நாட்டில் 19 தீர்ப்பாயங்களுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: உச்ச நீதிமன்றம்

நாட்டிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி), மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (சிஏடி), ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் உள்பட 19 தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களை
நாட்டில் 19 தீர்ப்பாயங்களுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: உச்ச நீதிமன்றம்

நாட்டிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி), மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (சிஏடி), ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் உள்பட 19 தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களை மேற்கொள்வதற்கு இடைக்கால ஏற்பாட்டை உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, தீர்ப்பாயத் தலைவர்கள், உறுப்பினர்களின் நியமனங்களை நெறிப்படுத்துவது உள்ளிட்ட ஷரத்துகள் அடங்கிய நிதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றியது. இந்தச் சட்டம் அரசியல்சாசனப்படி செல்லாது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில், மத்திய அரசின் மேற்கண்ட சட்டம் நீதித்துறையின் அதிகாரத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 
அந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, "அரசு இயற்றிய சட்டத்தை எதிர்க்கும் மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. இதனால், தீர்ப்பாயங்களில் தலைவர்கள், உறுப்பினர்களை நியமிக்க இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் இடைக்காலத் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் உள்ளது' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமர்ந்து பேசி இடைக்கால ஏற்பாடு ஒன்றை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீர்ப்பாய நியமனங்கள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்துக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். ஒரு சில மாற்றங்களுடன் பழைய விதிகளின்படியே நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, மேற்கண்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும் வரை தீர்ப்பாய நியமனங்களை மேற்கொள்ள இடைக்கால குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும், தலைமை நீதிபதியோ அல்லது அவரது பிரதிநிதியோ அக்குழுவின் தலைவராக இருப்பார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com