பிகானீர் நில முறைகேடு வழக்கு: வதேரா உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பிகானீர் நில முறைகேடு வழக்கில், ராபர்ட் வதேராவின் நெருங்கிய உதவியாளராக கூறப்படும் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

பிகானீர் நில முறைகேடு வழக்கில், ராபர்ட் வதேராவின் நெருங்கிய உதவியாளராக கூறப்படும் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் "ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி' நிறுவனம், பிகானீரில் போலியான பெயர்களில் நிலங்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் பேரில், அந்த மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ராபர்ட் வதேரா மறுப்பு தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை கடந்த 2015-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது. அதில் ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நில மோசடியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், வதேராவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக அறியப்படும் மகேஷ் நாகர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் இச்சோதனை நடைபெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத் துறையினர், குறிப்பிட்ட சில ஆவணங்களைக் கேட்டுப் பெற்றனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் இதர நபர்களுக்கு சொந்தமான ரூ.1.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மகேஷ் நாகரின் நெருங்கிய உதவியாளர் அசோக் குமார், ஜெய் பிரகாஷ் பகர்வா ஆகிய இருவரை கடந்த டிசம்பரில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com