உலகமே ஸீரோ டேவை உற்று நோக்க.. இந்தியாவில் ஒரு கேப் டவுன் உருவாகிறது

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் போகும் நாளைக் குறித்துவிட்டு காத்திருக்கும் கேப் டவுனை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட அதே நிலையை சந்திக்கவிருக்கும் ஒரு இந்திய நகரை பலரும் மறந்தே போனோம்.
உலகமே ஸீரோ டேவை உற்று நோக்க.. இந்தியாவில் ஒரு கேப் டவுன் உருவாகிறது

பெங்களூர்: ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் போகும் நாளைக் குறித்துவிட்டு காத்திருக்கும் கேப் டவுனை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட அதே நிலையை சந்திக்கவிருக்கும் ஒரு இந்திய நகரை பலரும் மறந்தே போனோம்.

தண்ணீர் பஞ்சம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக மாற விருப்பதாகவும், தண்ணீர் ஆதாரம் மேலும் குறைந்து வருவதாகவும், பெங்களூர் நகரம் மிக மோசமான அனுபவத்தை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மையத்தின் நிபுணர்கள் நடத்தியிருக்கும் ஆய்வில், 2020ல், பெங்களூர் நகரத்தின் தரைப்பகுதியில் 94%மும் கான்கிரீட் தரைகளாக மாறியிருக்கும் என்று எச்சரிக்கிறது. 

அதாவது, "40 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வெறும் 7% நிலப்பரப்பே கான்கிரீட் தரையாக இருந்தது. 69 சதவீதம் மண் தரைகள். தற்போது 78%க்கும் மேற்பட்ட தரை கான்கிரீட் தரைகளாக மாறிவிட்டன. தற்போது 7 சதவீதத்துக்கும் குறைவாகவே மண் தரை உள்ளது. இதனால் சுமார் 88 சதவீத மண் தரையையும், 79 சதவீத நீர் ஆதாரங்களையும் நாம் இழந்துவிட்டோம்.

கான்கிரீட் தரைப் பரப்பு 94% ஆக அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாறிவிடும். இது மிக மிக அபாயகரமான அளவு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரமயமாக்குதல் என்ற திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழத்துக்குச் சென்றுவிட்டது. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. நகரமயமாக்குதல் காரணமாகவே, பெங்களூர் நகரம் கேப் டவுனைப் போல மாறக் காரணமாகியுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

தற்போது இந்நகரின் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 1,800 அடி ஆழத்தில் உள்ளது. நிலத்தடி நீரையே நம்பியிருக்கும் பல பகுதிகளில் இதைவிடவும் கீழே தான் நீர் கிடைக்கிறது. நகரின் 40 சதவீத மக்கள் தற்போது தண்ணீர் லாரிகளில் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளனர். மீதமிருக்கும் 60 சதவீத மக்கள் காவிரி நீரை நம்பியுள்ளனர். ஆனால் காவிரியிலும் நீர் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், தண்ணீர் லாரிகளை நம்பியிருக்கும் மக்கள் தொகையின் அளவு நிச்சயம் அதிகரிக்கும். 

நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் வெகு ஆழத்துக்கு நிலத்தை துளையிட்டு போர்வெல்கள் மூலம் நீரை எடுப்பதால், அங்கிருந்து கிடைக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமான காப்பர், குரோமியம், சோடியம் போன்றவை அதிகமாக கலந்திருக்கும். இவை சிறுநீரகத்தை பாதிக்கும். 

ஆரம்பத்தில் ஒரு லட்சம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்த நிலையில், தற்போது 5 ஆயிரம் பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது. 

பெங்களூரில் இருந்த 193 நீர் ஆதாரங்கள், தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் கலப்பினால் மாசடைந்துவிட்டன.

சுற்றுச்சூழல் ஆர்வலர் எல்லப்பா ரெட்டி கூறுகையில், பெங்களூருவில் மல்லேஸ்வரம், பசவனகுடி பகுதிகளில் வெறும் 5 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. தற்போது ஆயிரம் அடிக்குக் கீழே தான் தண்ணீர் கிடைக்கிறது. பெங்களூருவில் பருவ மழை போதிய அளவு பெய்தது. பருவ மழையால் சுமார் 20 டிஎம்சி தண்ணீர் கிடைத்தது. ஆனால், அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட சேமிக்கப்படவில்லை. மரங்கள் தான் சிறு அணைகள் போல செயல்பட்டு வேர்களில் தண்ணீரை சேமித்து வைக்கும். ஆனால் சாலை விரிவாக்கம் என்று கூறி அவற்றையும் பிடுங்கிவிட்டோம். மழை நீர் முற்றிலும் வீணாகிவிடுகிறது என்கிறார்.

விவசாயத் துறை முன்னாள் செயலரும், தண்ணீர் சேமிப்பு ஆர்வலருமான ராஜா ராவ் கூறுகையில், பெங்களூர் நகருக்கு காவிரியைத் தவிர வேறு எந்த நீர் ஆதாரமும் இல்லை. கிட்டத்தட்ட நாம் கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டோம். நகரில் உள்ள முக்கிய ஏரிகளை தூர் வாரி சீரமைக்க வேண்டிய இறுதி கட்டத்தில் இருக்கிறோம். நாகாவாரா, பெலந்தர் உள்ளிட்ட ஏரிகளுக்கு உயிர்ப்பூட்டினால் மட்டுமே தப்பிக்க முடியும். காவிரியைத் தவிர வேறு எந்த நீர் ஆதாரமும் நம்மிடம் இப்போது இல்லை என்பதை மக்களாவது உணர வேண்டும் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com