கருணைக் கொலை செய்து விடுங்கள்: திருநங்கை  விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை! 

தொடர்ந்து விமான சேவைத்துறையில் வேலை மறுக்கப்படுவதால் கருணைக் கொலை செய்து விடுங்கள்என்று தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கருணைக் கொலை செய்து விடுங்கள்: திருநங்கை  விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை! 

புதுதில்லி: தொடர்ந்து விமான சேவைத்துறையில் வேலை மறுக்கப்படுவதால் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஷானவி பொன்னுசாமி (29). 2010-இல் பொறியியல் படிப்பை முடித்த இவர் 2014இல் பாங்காக் சென்று பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினார். இந்தத் தகவலை முறையாக அரசு கெசட்டிலும் அவர் பதிவு செய்துள்ளார். 'ஏர் இந்தியா' நிறுவனத்தில் பணிபுரிய விரும்பிய அவர் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கடந்த ஆண்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஓன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் கூறியிருந்தாவது:

ஆணாகப் பிறந்த நான் 2014ஆம் ஆண்டில் பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினேன். பின்னர் விமான நிலையத்தில் பணிபுரியும் என் கனவை நிறைவேற்றுவதற்காக சில விமான நிலையங்களில் பயிற்சி பெற்றேன். சென்னை ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பணியாற்றினேன்.

பின்னர் ஜூலை 10ஆம் தேதி ஏர் இந்தியா கேபின் க்ரீவ் பதவிக்கு வந்த விளம்பரத்தைக் கண்டு அதற்கு விண்ணப்பித்தேன். பெண்ணாக மாறியதால் பெண்கள் பிரிவில் விண்ணப்பித்திருந்தேன். ஏர் இந்தியா சார்பில் நடைபெற்ற தேர்வில் பங்கு பெற அழைப்புக் கடிதமும் பெற்று , அடுத்தடுத்து நடந்த தேர்வுகளில் சிறப்பாகப் பங்காற்றியும் நான் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கான காரணம் குறித்து விசாரித்த பொழுது தான் திருநங்கை என்பதால் தன்னைத் தேர்வு செய்யவில்லை என்று தெரிவித்தனர். விண்ணப்பப் படிவத்தில் திருநங்கைகளுக்காகத் தனி வரிசை இல்லை என்பதால் வேறு வழியின்றி பெண் என்று குறிப்பிட்டு நான் விண்ணப்பித்தேன்.

இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்த ஷானவி முன்னதாக 2014-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களில் திருநங்கைகளுக்காகத் தனி வரிசை ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததைச் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சந்திரா சூட் ஆகியோர் அடங்கிய அமர்வானது, இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா மற்றும் வான்வழிப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகும் இது தொடர்பாக எநத முன்னேற்றமும் இல்லை. இதனால் மிகவும் வேதனையடைந்த ஷானவி, தொடர்ந்து விமான சேவைத்துறையில் வேலை மறுக்கப்படுவதால் கருணைக் கொலை செய்யவாவது அனுமதி கொடுங்கள் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதி இருந்த கடிதத்தில், "எனது குடும்பத்தின் முதல் பட்டதாரி நான். பாலியல் தேர்வின் காரணமாக பெண்ணாக மாறினேன். எனது கனவான விமான பணிப்பெண் வேலைக்கு தொடர்ந்து முயன்றேன். எனக்கு தகுதி, திறமை எல்லாம் இருக்கிறது. ஆனால் நான் திருநங்கை என்பதைக் காரணம் காட்டி வேலை மறுக்கப்படுகிறது. இதற்கு மேலும் தொடர்ந்து போராட என்னால் இயலவில்லை. இப்படி இருந்தால் நான் எப்படி வாழ்வது?  நான்கு முறை தொடர்ந்து முயற்சித்தும் விமான சேவைத்துறையில் எனக்கு வேலை மறுக்கப்படுவதால், வாழ வழியில்லை. எனவே கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோ ஒன்றும் சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com