ஆம் ஆத்மி ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது: 3 ஆண்டு ஆட்சி நிறைவு விழாவில் கேஜரிவால் பேச்சு

தில்லியில் எனது தலைமையிலானஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் குறையத் தொடங்கியுள்ளது என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது: 3 ஆண்டு ஆட்சி நிறைவு விழாவில் கேஜரிவால் பேச்சு

தில்லியில் எனது தலைமையிலானஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் குறையத் தொடங்கியுள்ளது என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவையொட்டி என்டிஎம்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 
மூன்றாண்டுகளுக்கு தில்லிவாசிகள் ஒரு ஜனநாயகப் பரிசோதனையை மேற்கொண்டனர். அதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எளியோர்களை தேர்வு செய்து வெற்றி பெறச் செய்தனர். நாட்டின் வரலாற்றில் கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் ஆட்சியில் அமரச் செய்தனர். மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தது உலக சாதனைகளில் ஒன்றாகக் கருத்தப்படுகிறது.
ஜனநாயகத்தில் ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் மக்களுடைய சேவகர்களாவர். தில்லியில் நேர்மையான ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஊழல் குறைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதாரம், பொதுப்பணி ஆகிய துறைகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கல்வித் துறை, சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரட்சிகரமான பணிகள் நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு விடுதலையடைந்த பிறகு கல்வி, சுகாதாரத் துறைக்கு தில்லியை போன்ற நிதி ஒதுக்கீடு எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படவில்லை. இதற்குக் காரணம் மக்கள் மீது நம்பிக்கை எனலாம். சுகாதாரத் துறையில் மொஹல்லா கிளினிக், பாலி கிளினிக், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் என மூன்று அடுக்கு உள்கட்டுமானத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் 900 மொஹல்லா கிளினிக்குகளும், 120 பாலி கிளினிக்குகளும் திறக்கப்படும். ஒவ்வொரு 1.5 கி.மீட்டர் தொலைவுக்கு ஒரு மொஹல்லா கிளினிக் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் நிகழாண்டுக்குள் புதிதாக 3 ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்படும்.
கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 7,030 புதிய வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 8 ஆயிரம் வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்குள் 15 ஆயிரம் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். பொது இடங்களில் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி அடுத்த 6 மாதங்களுக்குள் தொடங்கும். தில்லி முழுவதும் இலவச வைஃபை வசதி அளிக்கும் திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவுள்ளது. 
இதுபோல, தூசு உள்ளிட்ட மாசுவைக் கட்டுப்படுத்த சாலையில் இரு புறங்களிலும் உள்ள காலி இடங்களில் புற்கள் வளர்க்கப்பட்டு பூங்கா உள்ளிட்டவை ஏற்படுத்தி அழகூட்டப்படும். இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். அங்கீகாரமற்ற காலனிகளில் சாலை, கழிவுநீர்க் கல்வாய் வசதி ஏற்படுத்தும் பணிகள் அடுத்த ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்றார் முதல்வர் கேஜரிவால்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி சட்டபேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com