ஆர்.கே. பச்சௌரி குறித்த செய்தியை வெளியிட தடைவிதிக்க முடியாது: தில்லி நீதிமன்றம்

தேரி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே. பச்சௌரிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த செய்தியை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்க முடியாது என்று தில்லி நீதிமன்றம் மறுத்து விட்டது

தேரி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே. பச்சௌரிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த செய்தியை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்க முடியாது என்று தில்லி நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதுதொடர்பான வழக்கு, தில்லி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுமித் தாஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:
வழக்கில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை, மக்களுக்கு உரிமை உள்ளது. இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டால், அது தனிநபர்களின் உரிமைகளுக்கு எதிரானதாக அமையும்.
ஆதலால் ஆர்.கே. பச்சௌரிக்கு எதிரான பாலியல் பலாத்கார வன்கொடுமை வழக்கு குறித்த செய்திகளை வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்கு தடை விதிக்க முடியாது; அதேநேரத்தில் பத்திரிகைகளும் பாரபட்சம் இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். பச்சௌரி அல்லது அவரது உதவியாளர்களின் கருத்துகளுடன் செய்திகளை பத்திரிகைகள் வெளியிட வேண்டும். மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது அல்லது நிலுவையில் உள்ளது என்பதையும் தனது செய்திகளில் பத்திரிகைகளும், ஊடகங்களும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றார் நீதிபதி.
தேரி அமைப்பில் பணிபுரிந்த பெண் ஒருவர், ஆர்.கே. பச்சௌரிக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். இதையடுத்து, ஆர்.கே. பச்சௌரிக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்களுக்கு எதிராக 2016ஆம் ஆண்டில் பச்சௌரி அவதூறு வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில், தனக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட சில தொலைக்காட்சிகள், குற்றச்சாட்டு தெரிவித்த பெண், அவரது வழக்குரைஞர் ஆகியோரிடம் பச்சௌரி ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com