இந்தியாவுக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் திட்டம்

பயங்கர தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக வடக்குப் பிராந்திய தலைமை அதிகாரி
இந்தியாவுக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் திட்டம்

பயங்கர தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக வடக்குப் பிராந்திய தலைமை அதிகாரி தேவராஜ் அன்பு எச்சரித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென புகுந்தனர். அந்த முகாமினுள் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் பதுங்கிக் கொண்டு, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அந்தக் குடியிருப்பை சுற்றிவளைத்த ராணுவத்தினர், பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 அதிகாரிகள் உள்பட ராணுவத்தினர் 6 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் முகாமுக்குள் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பயங்கரவாதிகள் 2 பேர் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்றனர். அதைத் தடுக்க முயன்ற சிஆர்பிஎஃப் வீரர் ஒருவருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் அந்த வீரர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பியோடிய பயங்கரவாதிகள் கரண்நகர் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடு ஒன்றிற்குள் சென்று புகுந்து கொண்டனர். அவர்களைச் சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த மாநிலத்தின் உதம்பூரில் உள்ள இந்திய ராணுவத்தின் வடக்குப் பிராந்தியத் தலைமையகத்தில் துணைத் தளபதி தேவராஜ் அன்பு, செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தும் சதித் திட்டத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே பயங்கரவாதிகள்தயாராக உள்ளனர். இமயமலைப் பகுதியில் உள்ள பீர் பஞ்சால் மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் 185 முதல் 220 பயங்கரவாதிகளும், வடக்குப் பகுதியில் 190 முதல் 220 பயங்கரவாதிகளும் நம் நாட்டுக்குள் ஊடுருவக் காத்திருக்கின்றனர். 
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடிப் பங்கு உள்ளது. சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று கேட்கிறீர்கள். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் இயங்குவது சிக்கலானதும், சவாலானதும் ஆகும். நாம் பழிக்குப் பழி வாங்க வேண்டிய அவசியம் எல்லை என்றே கருதுகிறேன்.
நாம் நமக்கான உத்தியை வகுக்கிறோம். அதை நாம் தொடர்வோம். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அவற்றுக்கு இந்தியா அளித்த பதிலடியில் 192 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அத்தகைய இரண்டு சம்பவங்களில் 6 அல்லது 7 பேர் மட்டுமே இறந்ததாக அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த எண்ணிக்கை அதிகம் என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் நமது நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட மீது மூன்று மடங்குக்கும் அதிகமான உயிரிழப்புகளை எதிரி நாட்டில் (பாகிஸ்தான்) நாம் ஏற்படுத்தினோம்.
ஜம்மு-காஷ்மீரில் மட்டுமின்றி நமது அண்டை நாடுகளிலும் பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானும் அதன் ஐஎஸ்ஐ உளவு அமைப்புகளும் நேரடியாக ஈடுபட்டுள்ளன. அதன் ஆதரவு, பயிற்சி, உத்தி ஆகியவை இல்லாமல் பயங்கரவாதம் இவ்வளவு காலத்துக்கு நீடிக்க முடியாது. எல்லையில் நம்மை நேருக்கு நேர் சந்திக்க முடியாத விரக்தியில் பாகிஸ்தான் மறைமுகமாக பயங்கரவாதத் தாக்குதல்களை ஊக்குவிக்கிறது.
எல்லையில் ஒரே ஒரு பாதுகாப்புக் குறைபாடு இருக்கிறது என்பதையும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். கட்டுப்பாட்டு எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் ரூ.364 கோடியைச் செலவிட்டுள்ளது. சிறிய முகாம்கள் மற்றும் உடனடி கவனம் தேவைப்படும் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு ராணுவம் முன்னுரிமை அளிக்கிறது.
இந்திய ராணுவம் மத அடிப்படையில் வீரர்களை பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. எந்தவொரு படைப்பிரிவிலும் அனைத்து மத நம்பிக்கைகளும் சின்னங்களும் காணப்படுகின்றன. ராணுவத்தின் உட்புற செயல்பாட்டை அறியாதவர்களே மத ரீதியில் விமர்சிக்கின்றனர். நாங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு எவ்வாறு இணைந்து வாழ்கிறோம் என்பதை எங்களிடம் வந்து அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் தேவராஜ் அன்பு.
அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி, 'சஞ்சுவான் தாக்குதலில் காஷ்மீர் முஸ்லிம்கள் உயிரிழந்தனர். முஸ்லிம்களின் தேசபக்தியைக் கேள்வி கேட்பதா?' என்று தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தேவராஜ் அன்பு மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.
அமெரிக்கா எச்சரிக்கை 


பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தேசிய உளவுப் பிரிவின்தலைவர் டான் கோட்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட்டின் உளவு விவகாரங்கள் தொடர்பான நிலைக் குழுவின் முன் ஆஜராகி கூறியிருப்பதாவது:
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல்களைத் திட்டமிடவும் நடத்தவும் பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் தொடர்ந்து முயற்சிப்பார்கள். பாகிஸ்தான் தொடர்ந்து அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். புதிய அணு ஆயுதத் திறன்களைப்பெறுவது, பயங்கரவாதிகளுடனான உறவுகளைப் பராமரிப்பது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வது, சீனாவுடன் நெருங்குவது ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் இதைச் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com