ஈரான் அதிபர் இன்று இந்தியா வருகை

ஈரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி, இந்தியாவுக்கு வியாழக்கிழமை (பிப்.15) வருகை தரவுள்ளார். தனது இந்திய சுற்றுப்பயணத்தை ஹைதராபாதில் இருந்து அவர் தொடங்கவுள்ளார்.
ஈரான் அதிபர் இன்று இந்தியா வருகை

ஈரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி, இந்தியாவுக்கு வியாழக்கிழமை (பிப்.15) வருகை தரவுள்ளார். தனது இந்திய சுற்றுப்பயணத்தை ஹைதராபாதில் இருந்து அவர் தொடங்கவுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
ஈரானில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்தபோது, அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானியை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று, ரௌஹானி இந்தியாவில் வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
தனது இந்திய சுற்றுப்பயணத்தை ஹைதராபாதில் இருந்து அவர் தொடங்கவுள்ளார். இதற்காக ஈரானில் இருந்து புறப்படும் ரௌஹானி, ஹைதராபாதில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு மாலை 4 மணிக்கு வரவுள்ளார்.
ஹைதாராபாதில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் முஸ்லிம் மத அறிவுஜீவிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ரௌஹானி பேசவுள்ளார்.
ஹைதராதில் உள்ள மெக்கா மசூதியில் வரும் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும், அங்கு வந்திருப்போர் மத்தியில் ரௌஹானி உரை நிகழ்த்தவுள்ளார். 
இதில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஹைதராபாதில் ரௌஹானி தங்கியிருக்கும் 2 நாள்களில், வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா குதுப் ஷாகி கல்லறை உள்ளிட்ட இடங்களுக்கு ரௌஹானி செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஹைதராபாதுக்கு ரௌஹானி வருகை தருவது இது 2ஆவது முறையாகும். ஆனால் அதிபராக பதவியேற்ற பிறகு, ஹைதராபாதுக்கு வருவது இதுதான் முதல்முறையாகும்.
ஹைதராபாத் பயணத்தை முடித்துக் கொண்டு தில்லிக்கு 16ஆம் தேதி ரௌஹானி செல்கிறார். தில்லியில் தங்கியிருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களையும் ரௌஹானி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com