காதல் ஜோடிகளை அச்சுறுத்தியதாக ஹிந்து அமைப்பினர் 10 பேர் கைது

காதலர் தினத்தையொட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாதில் திரண்ட காதல் ஜோடிகளை அச்சுறுத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்த 10 தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

காதலர் தினத்தையொட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாதில் திரண்ட காதல் ஜோடிகளை அச்சுறுத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்த 10 தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஆமதாபாதில் உள்ள சபர்மதி நதிக்கரை பகுதியில் காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் புதன்கிழமை திரண்டனர். அப்போது அவர்களை ஹிந்து அமைப்பினர் சிலர் மிரட்டுவதாகவும், அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார், அங்கிருந்த விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 10 தொண்டர்களைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக சபர்மதி நதிக்கரை காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.ஜே.பலோச் கூறுகையில் 'நாங்கள் சிலரைக் கைது செய்துள்ளோம். இந்த நாளில் மேலும் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக அப்பகுதியில் போதுமான காவலர்களை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்' என்றார்.
காதலர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சமம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் வடக்கு குஜராத் மண்டல ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹேமேந்திர திரிவேதி கூறுகையில் 'நாங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி எங்கள் தொண்டர்கள் நதிக்கரையில் போராட்டம் நடத்தினர். அங்கிருந்து வெளியேறுமாறு காதல் ஜோடிகளை நாங்கள் கேட்டுக் கொள்ளவே செய்தோம். நாங்கள் யாரையும் தாக்கவில்லை' என்றார்.
தடுப்புக் காவல்: இதனிடையே, காதலர் தினக் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள பூங்காக்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் முற்றுகையிடப் போவதாக கலிங்கா சேனை என்ற அமைப்பு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்ததது. இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 30 தொண்டர்களை நகர போலீஸார் புதன்கிழமை முன்னெச்சரிக்கையாக கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
ஹைதராபாதில் ஆர்ப்பாட்டம்: தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் காதலர் தினக் கொண்டாட்டங்களைக் கண்டித்து பஜ்ரங் தளத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com